131

ஒருதன்மைத் தாகு மறநெறி யாபோல்
உருவு பலகொள லீங்கு.'

இது லகரவொற்று இடை வந்த ஆசெதுகை.

1'அந்தரத் துள்ளே யகங்கை புறங்கையா
மந்தரமே போலு மனைவாழ்க்கை-யந்தரத்து
வாழ்கின்றே மென்று மகிழன்மின் வாணாளும்
போகின்ற பூளையே போன்று.' 

இது ழகரவொற்றிடை வந்த ஆசிடையெதுகை.

"யரலழ வென்னு மீரிரண் டொற்றும்
வரன்முறை பிழையாது வந்திடை யுயிர்ப்பின்
ஆசிடை யெதுகையென் றறிந்தனர் கொளலே."

என வரும் இவ்வொற்றுக்களை ஒழித்த வழியும் ஏனையெழுத்துக்கள் எதுகை வழுவாது நிற்குங்கால் இவை ஆசிடை எதுகையாம் என்க. பிறவுமன்ன.

 (5)

112. செய்யுள் வகை

பத்தியங் கத்திய மென்றிரண் டாஞ்செய்யுள்; பத்தியமேல்
எத்திய பாதங்க ளால்வந் தியலு மெனமொழிந்த;
கத்தியங் கட்டுரை செய்யுளின் போலிக் கலந்தவற்றோ
டொத்தியல் கின்றமை யாலொன்று தாமு முரைத்தனரே.

(இ - ள்.) செய்யுளெல்லாம் பத்தியம் என்றும், கத்தியம் என்றும் இரண்டு திறமாயடங்கும்; அவற்றுள் பத்தியமாவது, பாதங்களால் நடை பெறுவது எனக்கொள்க; கத்தியமாவது, கட்டுரைப் போலியும், செய்யுட்போலியுமென இரண்டு வகைப்படும். அவையாவன: யானைத் தொழில் முதலாயின எல்லாங் கட்டுரைப் போலி என்பனவாம்; ஒருபோகு முதலாயின எல்லாஞ் செய்யுட்போலி என்பனவாம்; ஒரு சாரார் அவையிற்றையும் பாதத்தான் நடைபெற்றனவாக வழங்கிப் பெயர் வேறுபடுப்பர்; அவர் சொல்லுமாறு:- வெண்பாவும், ஆசிரியப்பாவும், கலிப்பாவும், வஞ்சிப்பாவும் எனப் பாக்களை நான்கு வகைப்படுத்து, தாழிசை, துறை, விருத்தம் என இனங்களை மூன்றாக்கி, இவ்வினம் மூன்றினுக்கும் பா நான்கினுக்கும் வெவ்வேறே உரிமையாக்கி, பன்னிரண்டு இனமாக வகுத்து, வெண்டாழிசை, வெண்டுறை,


1. யாப்ப - வி. 37-ஆம் சூ. மேற்கோள்.