138

வேறா மென்றோள் வளைநெகி ழும்மே
கூறாய் தோழியான் வாழு மாறே.'

இது நான்கடியுந் தலைதடுமாற உச்சரித்தாலும் ஓசையும் பொருளும் வழுவாது வந்தமையால் அடிமறிமண்டில ஆசிரியப்பா.

'இந்திர னேறக் களிறீந் தனரே
முந்திதழ்ப் பூவின் முடிசூ டினரே
மந்திரக் கோடி மனத்தளித் தனரே
சுந்தரக் கோபுரச் சுருதிவாய் மையரே.'

இதுவும் அது.

'நெருங்குவளைப் பணைத்தோள் நிறனழிந் தனவே
பெருங்கண் பனியொடு படலொல் லாவே
இருங்கலி யிரவே யிறப்பவும் பெரிதே
அரும்பவிழ் கோதைக் காற்றுத லரிதே.'

இதுவும் அது. பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க.

இனி ஒருசாரார் ஆசிரியப்பா நான்கினையும் மண்டிலமாக்கிப் பெயர் வேறுபடுப்பர்.

அவை வருமாறு:-

1'முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தனளே
மலைய னொள்வேற் கண்ணி
முலையும் வாரா முதுக்குறைந் தனளே.'

இது நேரிசைமண்டில ஆசிரியப்பா.

'அறனல துடைத்தே யறனல துடைத்தே
வளமலர்க் குரவும் வழையு மாவும்
இளவண் டார்க்கு மின்னிள வேனில்
இன்பச் செவ்விக் கியைந்துங் காதலர்
அன்பிலர் துறத்த லறனல துடைத்தே.'

இது நிலைமண்டில ஆசிரியப்பா. மிக்க சொல்லும், மிக்க புகழும், மிக்க ஓசையும் உடைத்தாகலான் நேரிசை என்பது காரணக்குறி. அனைத்தடியும் ஒத்து நின்று இவ்வாறே பொருள் படுதலான் நிலைமண்டிலம் என்பது காரணக் குறி. பிறவும் அன்ன.

(9)


1. யாப்ப - வி. 73-ஆம் சூ. மேற்கோள்.