142

'திருமேவு பதுமஞ்சேர் திசைமுகனே முதலாக
உருமேவி யவதரித்த வுயிரனைத்து முயக்கொள்வான்
இவ்வுலகுங் கீழுலகு மிசையுலகு மிருணீங்க
எவ்வுலகுந் தொழுதேத்த வெழுந்தசெழுஞ் சுடரென்ன
விலங்குகதி ரோரிரண்டு விலங்கிவலங் கொண்டுலவ
அலங்குசினைப் போதிநிழ லறமமர்ந்த பெரியோய்நீ;

இது தரவு.

மேருகிரி யிரண்டா மெனப்பணைத்த விருபுயங்கள்
மாரனிதை யாவேட்டு மன்னுபுர மறுத்தனையே;
வேண்டினர்க்கு வேண்டினவே யளிப்பனென மேலைநாள்
பூண்டவரு ளாளநின் புகழ்புதிதாய்க் காட்டாதோ;

உலகுமிக மனந்தளர்வுற் றுயர்நெறியோர் நெறியழுங்கப்
புலவுநசைப் பெருஞ்சினத்துப் புலிக்குடம்பு கொடுத்தனையே;
பூதலத்து ளெவ்வுயிர்க்கும் பொதுவாய திருமேனி
மாதவனீ யென்பதற்கோர் மறுதலையாக் காட்டாதோ;

கழலடைந்த வுலகனைத்து மாயிரவாய்க் கடும்பாந்தள்
அழலடைந்த பணத்திடையிட் டன்றுதுலை யேறினையே;
மருள்பாரா வதமொன்றே வாழ்விக்கக் கருதியநின்
அருள்பாரா வதமுயிர்க ளனைத்திற்கு மொன்றாமோ;

இவை தாழிசை.

அருவினை சிலகெட வொருபெரு நரகிடை
எரிசுடர் மரைமல ரெனவிடு மடியினை;
அகலிட முழுவது மழல்கெட வமிழ்துமிழ்
முகில்புரி யிமிழிசை நிகர்தரு மொழியினை;

இஃது அராகம்.

அன்பென்கோ வொப்புரவென் கோவொருவ னயில்கொண்டு
முந்திவிழித் தெறியப்பால் போந்தமுழுக் கருணைய;
நாணென்கோ நாகமென் கோநன்றில் லான்பூணுந்
தீயினைப் பாய்படுத்த சிறுதுயில்கொண் டருளினை;

இவை ஈரடி இரண்டு அம்போதரங்கம்.

கைநாகத் தார்க்காழி கைகொண்ட ளித்தனையே;
பைநாகர் குலமுய்ய வாயமிழ்தம் பகர்ந்தனையே;
இரந்தேற்ற படையரக்கர்க் கிழிகுருதி பொழிந்தனையே;
பரந்தேற்ற மற்றவர்க்குப் படருநெறி மொழிந்தனையே;