144

ஆருயிர்க ளனைத்தினையுங் காப்பதற்கே யருள்பூண்டால்
ஓருயிர்க்கே யுடம்பளித்தா லொப்புரவிங் கென்னாகும்;
தாமநறுங் குழல்மழைக்கட் டளிரியலார் தம்முன்னர்க்
காமனையே முனைந்துலைத்தாற் கண்ணோட்டம் யாதாங்கொல்;

இது பேரெண்.

போரரக்க ரோரைவர்க் கறவமிழ்தம் பொழிந்தனையே;
ஆரமிழ்த மணிநாகர் குலமுய்ய வருளினையே;
வார்சிறைப்புள் ளரையர்க்கும் வாய்மைநெறி பகர்ந்தனையே;
பார்மிசை யீரைந்தும் பாவின்றிப் பயிற்றினையே;

இது சிற்றெண்.

அருளாழி பயந்தோய் நீஇ;
அறவாழி பயந்தோய் நீஇ;
மருளாழி துறந்தோய் நீஇ;
மறையாழி புரிந்தோய் நீஇ;
மாதவரின் மாதவ னீஇ;
வானவருள் வானவ னீஇ;
போதனரிற் போதன னீஇ;
புண்ணியருட் புண்ணிய னீஇ;

இவை இடையெண்.

ஆதி நீஇ;
அமல னீஇ;
அயனு நீஇ; 
அரியு நீஇ;
சோதி நீஇ; 
நாத னீஇ;
துறைவ னீஇ;
இறைவ னீஇ; 

அருளு நீஇ;
பொருளு நீஇ;
அறிவ னீஇ;
அநக னீஇ;
தெருளு நீஇ;
திருவு நீஇ;
செறிவு நீஇ;
செம்ம னீஇ;

இவை அளவெண்.

எனவாங்கு,

இது தனிச்சொல்.

பவளச் செழுஞ்சுடர் மரகதப் பாசடைப்
பசும்பொன் மாச்சினை விசும்பகம் புதைக்கும்
போதியந் திருநிழற் புனிதநிற் பரவுதும்
மேதகு நந்தி புரிமன்னர் சுந்தரச்
சோழர் வண்மையும் வனப்புந்
திண்மையு முலகிற் சிறந்துவாழ் கெனவே.