153

'மிக்க கூன் விதிமுறை வகுத்தல்'

என்னும் உரைச் சூத்திரத்துக்குப் பொருள்: கூனாவது, பொருளோடு அடி முதற்கே நிற்பதுவும், இடையிலே நிற்பதுவும், வஞ்சியின் கடையிலே நிற்பதுவுமாம். வஞ்சி அடியின் இறுதியும் நடுவும் 1 அசை கூனாய் வருவது சிறப்புடைத்து. சீர், கூனாய் வரினும் உகர இறுதியாய் வரப்பெறும். கூனைத் தனிச்சொல் என்பாருமுளர்.

2'உதுக்காண், சுரந்தானா வண்கைச் சுவர்ணமாப்பூதி
பரந்தானாப் பல்புகழ் பாடி--யிரந்தார்மாட்
டின்மை யகல்வது போல விருள்நீங்க
மின்னு மெளிதோ மழை.'

3'அவரே, கேடில் விழுப்பொரு டருமார் பாசிலை
வாடா வள்ளியங் காடிறந் தோரே
யானே, தோடா ரெல்வளை நெகிழ வேங்கிப்
பாடமை சேக்கையிற் படர்கூர்ந் திசினே
அன்ன ளளிய ளென்னாது மாமழை
இன்னும் பெய்யு முழங்கும்
இன்னுந் தோழியென் னின்னுயிர் குறித்தே.'

இது அடியிற் கூன் வந்த ஆசிரியம்.

4'உமணர், சேர்ந்து கழிந்த மருங்கி னகன்றலை
ஊர்பாழ்த் தன்ன வோமையம் பெருங்கா
டின்னா வென்றினி ராயின்
இனியவோ பெரும தமியேற்கு மனையே.'

இதுவும் அடியிற் கூன் வந்த ஆசிரியம்.

5'உலகினுள், பெருந்தகையார் பெருந்தகைமை பிறழாரே பிறழினும்
இருந்தகைய விறுவரைமே லெரிபோலச் சுடர்விடுமே
சிறுதகையார் சிறுதகைமை சிறப்பென்றும் பிறழ்வின்றி
உறுதகைய வுலகிற்கோ ரொப்பாகித் தோன்றாதே.'

எனக் கலியடி முதற்கண்ணே 'உலகினுள்' என்னுங் கூன் வந்தவாறு.


1. இச்சொல் முற்பதிப்பில் இல்லை.

2. யாப்ப - வி. 94-ஆம் சூ. மேற்கோள்.

3. குறுந்தொகை, 216.

4. குறுந்தொகை, 124.

5. யாப்ப - வி. 94-ஆம் சூ. மேற்கோள்.