176

நான்கடியான் வந்த சவலை, எதுகை இன்றி வரினும் சவலைப் போலியாம் எனக்கொள்க. இதனால் எல்லாச் செய்யுளும் எதுகை அழியினும் போலியாகும் என்றாராயிற்று. முடிவிரண்டும் மிக்கும், முதலிரண்டும் நைந்தும், முடிவிரண்டு குன்றி முதலிரண்டு மிக்கும், இடையிடையஃகியும், மிக்கும் வரினும் நடைச்சவலைப் பாதச்சம விருத்தம் என்பாருமுளர்.

வரலாறு:-

'சங்குமுள பறையுமுள தாநல்ல கவரியுள
எங்குமுள துரவுகிண றெறியுமறி கொடியுமுள
பொங்குபுனல் வந்தலைப்பப் புள்ளினங்க ளார்ப்பப்
பொருகயலோ டினவாளை புறக்கணித்து நோக்கத்
தெங்குபழம் வீழ்ந்தொழுகுங் காவிரியின் றென்பாற்
றிருவெண்காட் டையவெனிற் றீவினைகள் கெடுமே.'

இது முதற்சவலை. பிறவும் ஒட்டிக் கொள்க. இனிச் சந்தமும் தண்டகமும் ஆமாறு சொல்லுகின்றான்.

(24)

131. விருத்தமும் தண்டகமும் ஆமாறு

ஒன்றாதி யென்ப ரொருசா ரவரொரு நான்குமுன்னாம்
என்றா லினிதுசந் தத்தி னெழுத்தை யிருபதின்மேல்
நன்றாய வாறுயர் வாமென் றுரைப்பர்நற் றண்டகமேற்
பின்றாத கட்டளை நான்குமுன் னாகிப் பெருகிடுமே.

(இ-ள்.) விருத்தவடிகள் ஓரெழுத்து முதலாக வருமென்பர் ஒருசாரார்; நான்கெழுத்து முதலாக வந்தால் அல்லது ஓசையுண்டாகா; விருத்தவடிக்குப் பெருமை *இருபத்தாறு எழுத்து எனக்கொள்க; எனவே இருபத்தா றெழுத்தின் ஏறினவெல்லாம் விருத்தப் போலியாம் என்றாராயிற்று. தண்டகம் நான்கு கட்டளை முதலாக வரும்.

(25)

132. இலகுவும் குருவும் ஆமாறு

ஏறிய நெட்டெழுத் தேநெடி லொற்றே யெழில்வடநூல்
கூறிய சீர்க்குறி லொற்றே குருவாம் குறிலதுவே
வேறியல் செய்கை யிலகுவென் றாகும்; வியன்குறிலும்
ஈறிய லிற்பிறி தாமொரு காலென் றியம்புவரே.


* 'இது வடநூற்றுணிபு. தமிழின் முப்பத்து மூன்றெழுத்து ஈறாக வரும்; அடியிரட்டித்த விருத்தங்களில் அதற்கு மேலும் வரப்பெறும்,' என்பது பழைய குறிப்பு.