195

(இ-ள்.) தண்டகத்திற்கு இலக்கணஞ் சொல்லுவானெடுத்துக்கொண்டான். அஃது ஆமாறு: நெடிலுக்கு நிரையசையும், குறிலுக்கு நேரசையும், வல்லொற்றுக்குப் புள்ளியும், மெல்லொற்றுக்கு வட்டமும், இடையொற்றுக்கு விலகும் ஐந்து குறியாம் (எ-று.)

இதனுள் நெடிலிரண்டு மாத்திரை உடைமையின், முன்வைத்தார். குறில் ஒரு மாத்திரை உடைமையிற் பின் வைத்தார். வல்லொற்றுத் தனக்குச் சொல்லிய குறியெவ்விடத்துந் தவிராது பெறுதலின், அதற்குப் பின்வைத்தார். மெல்லொற்றுத் தனக்குச் சொல்லிய குறிநெடிற் பின் மிகப் பெறாது ஒழிதலானும், குறிற்பின்பு ஒரோவழிப் பெறுதலானும் அதன்பின் வைத்தார். இடை ஒற்றில் பதின்மூன்றாம் ஒற்றும் பதினாறாம் ஒற்றும் என்னும் இரண்டு தவிர ஒழிந்தவொற்றுச் சிறுபான்மையாற் பெறுதலானும், மெல்லொற்றோடு மயங்கி வருதலானும், பின்பு அடைய வைத்தார். இவை குறி பெறுகையும் பெறாது ஒழிகையும் உச்சாரணையாற் கண்டு கொள்க. இவ்விடத்து ஐகாரமும் ஒளகாரமும் குற்றெழுத்தாம் என்க.

வரலாறு:-

"துற்றுற் றன்றிவெம் போர்செய்த விற்கைப்

பன்மன்முன் போடவோர் தத்திற் றுன்றுவன்
பாய்பரி யுய்த்துத் தன்மைகொண் டோடிய

வெற்றுச் செம்பியன் பார்புகழ் கொற்கைக்

கண்டன்வன் பாரதம் வெற்புக் கொண்டுதிண்
போர்புரி கொப்பத் தன்றெதிர்ந் தோர்வெறு

கொற்றத் தொங்கல்சிங் காசன மொற்றைச்

சங்குவெண் சாய்மரை குத்துப் பந்தர்முன்
பாவிய முத்துப் பந்திமுன் றான்மகி

ழொற்றைப் பெண்டிர்பண் டாரமொ டொற்றைத்

தன்பெருஞ் சேனையு மிட்டிட் டன்றுடைந்
தான்வசைப் பட்டுக் கண்டவங் காரனே."

இது குற்றெழுத்து நெட்டெழுத்துக்களும், வல்லொற்று மெல்லொற்றுக்களும் குறி முறையே பெற்று இடையொற்றுக்கள் குறி பெறாது வந்த துண்டம் பதினாறாய் நான்கடியாய் வந்த தண்டகம். இதனுள் ஐகாரமுங் குற்றெழுத்தாய் வந்தது. இடை யொற்றுக் குறி பெறாமை உச்சாரணையே கருவியாக அறிக.

(34)