199

விரவியலாம் என்க. சொல்லே உடலாக என்பதனாற் சொல்லாவன செய்யுட்கு உறுப்பாகிய சீர் பன்னிரண்டையும் எனக்கொள்க. ஒரு சொல்லே ஒரு சீராய் வருவது சிறப்புடைத்து. எழுத்தும், அசையும், சீரும், தளையும், அடியும், தொடையும், அல்லவே யாப்பினுக்கு உறுப்பாவன எனில், அது பொருந்தாது. எழுத்துக்களை அசைக்குறுப்பு என்றமையால், அவையெல்லாம் ஒன்றுக்கொன்று உறுப்பாய் யாப்புக்கு உறுப்பாவனவாம். அன்றியுந் தொடைகளையும் ஆதாரமாகச் சொன்னமையால், அது பொருந்தாது என்க. 

(1)

144. இத்தகைய சொல்லே செய்யுட்குக் குற்றமில்லாத
உறுப்பாம் என்பது

சார்ந்த வழக்கொடு தப்பா வடவெழுத் தைத்தவிர்ந்து
தேர்ந்துணர் வார்க்கு மினிமையைத் தந்துசெய் யுட்களினும்
நேர்ந்து சொலப்பட் டுயர்ந்தவ ரால்நிர லேபொருளை
ஓர்ந்து கொளப்படுஞ் சொற்குற்ற மற்ற வுறுப்பென்பரே.

(இ-ள்.) வழக்கதிகாரத்தோடும் பொருந்தித் தமிழினோடுங்கூடி, வடவெழுத்தைத் தவிர்ந்து, பெரிதுமின்பந் தந்து, பெரியோராற் செய்யப்பட்ட செய்யுட்களினும் வந்து திரிதற் பொருட்கோளின்றியே நிரலே பொருள் விளங்க இருக்குஞ் சொல்லுக்கள் குற்றமற்ற உறுப்பாவன (எ-று.)

அப்படியே குற்றமற்ற உறுப்புக்களால் நிரம்பிய உடலே குற்றமற்ற உடலாவதாம். மணிப்பிரவாளத்தினுக்கும் விரவியல் செய்யுட்களுக்கும் வடவெழுத்து வருகவென்று சிறப்பிலக்கணம் உண்மையால், அவற்றில் வடவெழுத்து வருவது குற்றம் அன்றென்க. 

(2)

145. இப்படிப்பட்ட சொற்கள் செய்யுட்குப் பழிக்கப்பட்ட
உறுப்பாம் என்பது

தெற்றி வழக்கொடு தேர்ந்துணர் வார்க்கின்பஞ் செய்யலின்றிப்
பற்றி வடநூ லெழுத்துக்க ளோடு பயின்றுரையின்
மற்றிவை யில்லென்று வாங்கவும் பட்டுப் பொருண்மருண்டிப்
பெற்றி யுடைச்சொற் பழித்த வுறுப்பென்று பேசுவரே.

(இ-ள்.) இப்படிப்பட்ட சொற்கள் பழிக்கப்பட்ட உறுப்பாவன (எ-று.)