205

"தண்பனி முகிறகைத் தலையாகு வள்ள
லொண்புகழ் கிளப்ப துதாரதை யாகும்."

"காலையும் வந்த கவைஞர் கதிர்கரந்த
மாலையும் வாராதே யென்செய்வார்--நீலம்
புனிற்றா நிரைமேயும் புள்வேளூர்ப் பூதா!
கனிற்றாகா ணம்மறையார் கை."

எனக் கொள்க.

புலனாவது, பொருள் விளங்கி இருப்பது.

"சொலப்படும் பொருளுமச் சொல்லும் வண்ணமும்
புலப்படக் கிடப்பது புலனெனப் படுமே."

வரலாறு:-

1"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று."

இது பொருள் விளங்க இருத்தலால் புலனாயிற்று.

பொருட்டெளிவு ஆவது,

"தெருள்படு மொழிவயிற் றெரியா ததற்குப்
பொருளாற் றெரிவது பொருட்டெளி வாகும்."

வரலாறு:-

"குளம்பின் மடிநாகர் புண்ணீரிற் செம்மை
வளந்திகழு மால்கடல்வாய் நின்று -- விளங்கொளிசேர்
மாலாய் முனிந்தெடுக்கப் பட்டாளிம் மண்மகளாஞ்
சேலாருங் கண்மயிலே சென்று."

இதனுட் 'குளம்பு' என்ற பொழுது மாலுருவாய் நின்ற பன்றியின் குளம்பென்பது. இது பொருளால் தெளிதலால் பொருட்டெளிவு எனப்பட்டது.

இனி இன்பம் என்னும் உயிரலங்காரம் ஆவது, சொல்லின் கண்ணும் பொருளின்கண்ணும் சுவையுடைத்தாவது. அதுதான் முன்னைப் பிறப்பினும் கவிப்பொருத்தம் உடையானுக்கு அல்லாது தெளியாது,

"நவையறு மொழியினு நயத்தினும் பொருளினுஞ்
சுவைவரத் தொடுக்குந் தூக்கே யின்பம்."

என்பதாகலின்.


1. திருக்குறள், 108.