218

1"தொடலைக் குறுந்தொடி தந்தாண் மடலொடு
மாலை யுழக்குந் துயர்."

இது நாணுத் துறவுரைத்தல் என்னும் அதிகாரத்தது, ஆயினும் அவ்வதிகாரத்துக்கு உரித்தல்லாத பொருளை உணர்த்தி அவ்வதிகாரச் சொல்லையும் விளக்குதலால், நுவலாச் சொல்லாயிற்று. இதனை நுவலா நுவற்சி என்றாலும் அமையும்.

"அடைநின் றியம்பி யறிபொருள் விளக்குதல்
நுவலாச் சொல்லென நுவன்றனர் புலவர்."

எனக் கொள்க.

"மன்னிய பெண்ணை வதைசெய்த வாள்வலியுங்
கன்னியை யெய்திக் கலந்ததுவும்--பொன்னிக்
குலமங்கை தன்னைக் கொலைசெய் ததுவு
மலர்மங்கை கோற்கோர் வடு."

இது பழித்தாற்போலப் புகழ்தலால், தெளிவில் புகழ்ச்சியாயிற்று.

"பழிமொழி மொழிந்து பல்புகழ் விளக்குதல்
தெளிவில் புகழ்ச்சி யென்மனார் புலவர்."

எனக் கொள்க.

"அண்ட முதற்பரிதி யாக்கிப் பெயரடைவாம்
புண்டரிகப் பொய்கை பொலிவுக்கு--மண்டலத்தி
னுற்றாரை நோக்கி யுபகரித்த லேயன்றோ
பற்றான வாழ்வாற் பயன்."

இது முன்பு ஒன்றைச் சுட்டிக் கூறுதலால் சுட்டாயிற்று. இதனை நிதரிசனம் எனவும் அமையும்.

"ஒட்டிய பொருள்வர வொன்றைமுன் வைத்துச்
சுட்டிக் கூறுதல் சுட்டென மொழிப."

எனக் கொள்க.

153. ஒருங்கியல், பரி மாற்றம், ஆசி, விராவு, பாவிகம்
என்னும் அலங்காரங்கள் ஆமாறும், அவைகளின்
தொகையும்

ஆக்கு மொருங்கிய லேபரி மாற்றத்தொ டாசிவிராத்
தாக்கு மொழிப்பா விகமிவை யேழைந்துந் தண்டிசொன்ன
வாக்கு மலியலங் கார மெனவறி; மற்றுமின்ன
நோக்கு மெனிற்பல வாமலங் கார நுடங்கிடையே !


1. திருக்குறள், 1135.