228

உவமித்தலும் என மூன்று பகுதியாம். அப்படி உவமிக்குமிடத்துப் பண்பும், பயனும், தொழிலும், வடிவும் முதலாகிய காரணங்களால் உவமிக்கப்படும். அதற்குறுப்பாக உவமிக்கப்படும் பொருளும், உவமையும், இவ்விரண்டுக்கும் பொதுவாய் நின்ற பண்பு முதலாகிய காரணமும் என மூன்று வரும் (எ-று.)

வரலாறு:-

'ஆபோலும் ஆமா,' என்பது பட்டாங்குரைத்தலுவமை.

1"மலர்காணின் மையாத்தி நெஞ்சே யிவள்கண்
பலர்காணும் *பூவொப்ப தென்று."

இது புகழ்தலுவமை.

2"அறைபறை யன்னர் கயவர்தாங் கேட்ட
மறைபிறர்க் குய்த்துணர்த்த லால்."

இது பழித்தலுவமை. இதுவே தொழிலுவமையுமாம்.

3"பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர்."

இது பண்புவமை.

4"ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம்
பேரறி வாளன் றிரு."

இது பயனுவமை.

5"மலரன்ன கண்ணா ளருமை யறியா
தலரெமக் கீந்ததிவ் வூர்."

இது வடிவுவமை.

'ஆதி' என்றதனால், நிறம் குணம் சுவை முதலியனவுங் கொள்க.'

157. பிறவாற்றான் ஆகும் உவமை அலங்காரத்தின் வகைகள்

ஒப்பி லுவமை யிழிவுயர் வோடு முயரிழிவு
துப்பில் சமமே தலைப்பெயல் கூற்றுத் தொகைவிரிவு
தப்பி லுறழ்ந்து வரலோ டொருவழி யோர்பொருண்மேற்
செப்புச் சினைமுத லொப்பு மறையென்று தேர்ந்தறியே.


* பூவொக்கு மென்று.

1. திருக்குறள், 1112.

2. திருக்குறள், 1076.

3. திருக்குறள், 1121.

4. திருக்குறள், 215.

5. திருக்குறள், 1142.