242

வெப்பந் தருமம் பரவசத் தோடு வியன்குணமற்(று)
ஒப்புப் பொருளின் தடைமொழி தன்னை உரைத்துணர்ந்து
செப்ப முடையவர் காலங்கண் மூன்றிற் றிருத்திப்பின்னும்
எப்பண்பு கொண்ட விகற்பம் வரினு மியற்றுவரே.

(இ-ள்.) ஆசித் தடைமொழியும், அனாதரத் தடைமொழியும், காரணத் தடைமொழியும், காரியத் தடைமொழியும், ஐயத் தடைமொழியும், ஏதுத் தடைமொழியும், உபாயத் தடைமொழியும், சிலேடைத் தடைமொழியும், முயற்சித் தடைமொழியும், பிற பொருள் வைப்புத் தடைமொழியும், கருணைத் தடைமொழியும், நட்புத் தடைமொழியும், கருமத் தடைமொழியும், இகழ்ச்சித் தடைமொழியும், வன்சொல் தடைமொழியும், இரக்கத் தடைமொழியும், தலைமைத் தடைமொழியும், அனுசயத் தடைமொழியும், செற்றத்தடை மொழியும், வெப்பத் தடைமொழியும், தருமத் தடைமொழியும், பரவசத் தடைமொழியும், குணத் தடைமொழியும், உடன்பாட்டுத் தடைமொழியும், பொருள் தடைமொழியும் என விகற்பிக்கப்படாநின்ற தடைமொழியலங்காரத்தை மூன்று காலத்தினோடும் பொருந்துவித்துக் கூறுவர். இது நெறியாகப் பிறவாற்றான் வந்தனவும் அமைத்துக்கொள்வர் (எ-று.)

வரலாறு:--

'ஏகுக வன்ப ரெளிதாகச் சென்னெறிக்கண்
யானு மினிதிருக்க வீண்டு'.

இது ஆசி சொன்னமையால், ஆசித் தடைமொழி.

'ஆசை பொருட்கில்லை யன்பர்க்கின் றென்பக்க
லேகுக நிற்க வினி'.

இது அனாதரத் தடைமொழி.

'கண்விற் புருவத்தா னேர்தர நீசீறி
என்னாம் பிறரிதறிந் தென்னாகும்--பண்ணிய
குற்றமொன் றென்பக்க லின்மையாற் கூர்ந்தீரு
மச்சஞ் சிறிதுமுள தன்று.'

இது அச்சத்திற்குக் காரணமாகத் தன்பாற் குற்றமின்மை கூறினமையால், காரணத் தடைமொழி.

'அன்ப ரகன்றா ரவர்குறித்த கார்ப்பருவம்
வந்த துயிர்த்திலண் மாது.'