259

(இ-ள்.) தாம் முயல்கின்ற காரியத்திற்குப் பிறிதொன்று துணை செய்ததாகச் சொல்லல் சமாயிதமாம் ; உதாரதை என்னும் அலங்காரம் செல்வ மிகுதியும் உள்ள மிகுதியுஞ் சொல்லுதலாம் ; உண்மை மறுத்து வேறு சொல்லுதல் அவனுதியாம் ; அது சிறப்பவனுதியும், பொருளவனுதியும், குணவவனுதியும் என மூன்றாகச் சொல்லுவர்.(எ-று.)

வரலாறு:-

'வான்குணத் தெம்பிக்கு மன்னு பெருஞ்செல்வம்
யான்கொடுப்பேற் கெங்கோனு மிக்களித்தா--னான்போய்க்
கரும்பேறு நாட்டார்தங் காவலன்றன் றேவி
தரும்பேறு மற்றுண்டோ சாற்று.'

இதனுள் தான் கொடுப்பானாகவிருந்த அரசுக்குத் தசரதனும் உடன்பட்டான் என்றமையால் சமாயிதம் என்னுமலங்காரமாயிற்று.

'நினைவுடைப் பொருளை நிரப்புதற் கதுவுந்
துணையெனப் படுவது துணைப்பே றென்ப.'

சமாயிதம் எனினும் துணைப்பேறு எனினும் ஒக்கும்.

'கன்றும் வயவேந்தர் செல்வம் பலகவர்ந்து
மென்றும் வறியோ ரினங்கவர்ந்து--மொன்று
மறிவரிதாய் நிற்கு மளவினதாற் சோரி
செறிகதிர்வேற் சென்னி திரு.'

இது செல்வமிகுதி சொன்னமையால், செல்வமிகுதி உதாரதை.

'மண்ணகன்று தன்கிளையு நீங்கி வனமடைந்து
பண்ணுந் தவமுயலும் பார்த்தனார்--விண்ணிறந்து
மீதண்டர் கோன்குலையும் வெய்யோர் குலந்தொலைத்தான்
கோதண்ட மேதுணையாக் கொண்டு.'

இஃது உள்ளமிகுதி சொன்னமையால் உள்ளமிகுதி உதார்த்தம்.

'செல்வமு முள்ளமுஞ் சீர்மைசெப் பிடுத
லொள்ளிய வுதார்த்தமென் றுரைத்தனர் கொளலே.'

'நறைகமழ்தார் வேட்டார் நலநீத்து நாணு
நிறையு நிலைதளரா நீர்மை--யறநெறிசூழ்
செங்கோல னல்லன் கொடுங்கோலன் றெவ்வடுபோல்
வெங்கோப மால்யானை வேந்து.'

இஃது ஒருவனைச் சிறப்பித்து வருதலால், சிறப்பவனுதி.