265

(இ-ள்.) நுவலாச் சொல்லென்னும் அலங்காரம் ஒரு பொருளைப் பழித்தாற்போலப் புகழ்தலாம்; புகழாப் புகழ்ச்சியெனினும் நுவலாச் சொல் எனினும் ஒக்கும். தெரிவில் புகழ்ச்சியாவது, ஒன்றைப் பழித்தற்கு வேறொன்றைப் புகழ்தலாம். சுட்டென்னும் அலங்காரம் ஒரு வகையால் நிகழ்பொருளிடத்தே வரும் பயனைப் பிறிதொன்றற்கு நன்மையாவது தீமையாவது தோன்றச் சொல்லுதலாம் (எ-று.)

நிதரிசனம் எனினும் சுட்டெனினும் ஒக்கும்.

வரலாறு:--

'நினைவரிய பல்புகழார் நின்குலத்துத் தொல்லோ
ரனைவரையும் புல்லினா ளன்றே--மனுநூல்
புணர்ந்த நெறியொழுகும் பூழியநீ யிந்நாண்
மணந்த தடமலர்மேன் மாது.'

இது புகழாப் புகழ்ச்சி.

1 'இரவறியா யாவரையும் பின்செல்லா நல்ல
தருநிழலுந் தண்ணீரும் புல்லு--மொருவர்
படைத்தனவுங் கொள்ளாவிப் புள்ளிமான் பார்மேற்
றுடைத்தனவே யன்றோ துயர்.'

இது தெரிவில் புகழ்ச்சி.

2 'பிறர்செல்வங் கண்டாற் பெரியோர் மகிழ்வுஞ்
சிறியோர் பொறாத திறமு--மறிவுறீஇச்
செங்கமல மெய்மலர்ந்த தேங்குமுத மேபசந்த
பொங்கொளியோன் வீறெய்தும் போது.'

இது நன்மை வெளிப்படச் சொல்லிய சுட்டு.

'பெரியோ ருழையும் பிழைசிறிதுண் டாகி
லிருநிலத்தில் யாரு மறியத்--தெரிவிக்குந்
தேக்குங் கடலுலகில் யாவர்க்குந் தெள்ளமுதம்
வாக்கு மதிமேன் மறு.'

இது தீமை தோன்றச் சொல்லிய சுட்டு. (32)


1. தண்டியலங்காரம், சூ.83 உரை மேற்கோள்

2. தண்டியலங்காரம், சூ.85 உரை மேற்கோள்

3. தண்டியலங்காரம், சூ.85 உரை மேற்கோள்