269

தொகை நிலையாவது, பொருள், இடம், காலம், தொழில் ஆகியவற்றிற் பல பாட்டொருங்கு தொக்கது. காப்பியமாவது, பெரு நூலாம் (எ-று.)

பொருளாற்றொக்கது புறநானூறு. இடத்தாற்றொக்கது களவழி நாற்பது. காலத்தாற்றொக்கது கார் நாற்பது. தொழிலாற்றொக்கது ஐந்திணை. பாட்டாற்றொக்கது கலித் தொகை. அளவாற்றொக்கது குறுந்தொகை.

177. சொல்லணியாமாறு :

ஆதியு மீறு மிடையு மடியொன்றி லேமடக்கும்
ஓதிய பாதங்க ணான்கினு மாம்; ஒரு பாதமுற்றுந்
தீதிய லாமை மடக்கலு முண்டு; தெரிந்தவற்றைக்
கோதிய லாமை விகற்பத் தினிலறி கோல்வளையே!

(இ-ள்.) ஓரடியின்கண்ணே தலைமடக்காய் வருதல், இடைமடக்காய் வருதல், கடைமடக்காய் வருதல், மடக்கலங்காரமாம்; உம்மையான் மூன்றிடத்தும் இரண்டிடத்தும் மடக்குதலுமுண்டு. பலபாதத்தின் முதலிடை கடை மடக்கி வருதலும் மூன்றிடத்தும் மடக்கி வருதலும் உண்டு. பாதமுற்றும் மடக்கியும் வரும் (எ-று.)

'ஒத்த வெழுத்திற் பொருள்வே றாக
வைத்துமொழி மடக்கினது மடக்கெனப் படுமே.'

எனக் கொள்க.

'பண்ணைக்கு நன்மருங்கிற் பாரித்துப் பாட்டயரும்
பண்ணைக் குவளையங்கட் பான்மொழியார்--பண்ணைக்
கொடியா டுயர்மாடக் குன்றினவே யென்றிக்
கொடியா டுயர்மாடக் குன்று.'

இது முதன்மடக்கு. இடை மடக்கினவு மீறு மடக்கினவும் வந்த வழிக் கண்டுகொள்க. மடக்கெனினும் யமகம் எனினும் ஒக்கும்.

'மணிமருங் குடையன வயிரக் கோட்டன
வணிமருங் கருவிய வால வாயின
மணிமருங் குடையன வயிரக் கோட்டன
வணிமருங் கருவிய வரச வேழமே.'

இஃது அடி மடக்கு. பிறவும் அன்ன.