278

ளொருங்குடன் வைத்த வுதாரண நோக்கி
விரித்து முடிக்கு மிறைக்கவிப் பாட்டே
யுருவக மாதி விராவிய லீறாய்
வருமலங் காரமும் வாழ்த்தும் வசையுங்
கவியே கமகன் வாதி வாக்கியென்
றவர்க டம்மையு மவையி னமைதியும்
பாடுதன் மரபுந் தாரணைப் பகுதியு
மானந்த முதலிய வூனமுஞ் செய்யுளும்
விளம்பின தியற்கையு நரம்பு விகற்பமும்
பண்ணுந் திறனும் பாலையுங் கூட்டமு
மெண்ணிய திணையு மிருதுவுங் காலமு
மெண்வகை மணமு மெழுத்துஞ் சொல்லுஞ்
செந்துறை மார்க்கமும் வெண்டுறை மார்க்கமுந்
தந்திர வுத்தியுந் தருக்க முட்டியு
முந்துநூன் முடிந்த முறைமையின் வழாமை
வந்தன பிறவும் வகுத்தினத் துரைப்பா
னந்தமில் கேள்வி யாசிரி யன்னே.'

என்று அமிர்த சாகரனார் கூறியன கொள்க.

எழுகூற்றிருக்கையாவது, ஏழு வரி மூன்றறைமுதல் ஒன்றற்கொன்று இரண்டறை மேற்பட முறையாகக் கீறி முறையே மக்கள் போக்கும், போந்து மீள்வும் ஆடும் பெற்றியின் வழுவாமல் ஒன்று முதலாகப் பாடுவது.

கரந்துறை பாட்டாவது, ஒரு பாட்டைச் செவ்வே எழுதினால், ஒற்று மொழிக்கு முதலாம் எழுத்துத் தொடங்கி ஒன்று விட்டு வாசிக்க மற்றொரு பாட்டாவது.

தூசங்கொளலாவது, ஒருவன் ஒரு வெண்பாச் சொன்னால், அதனீறே முதல் எழுத்தாக மற்றொரு வெண்பாப் பாடுவது.

வாவன் ஞாற்றாவது, முந்துறக் கொடுத்த எழுத்துக்கு ஈறு பாடிப் பின்னைக்கொடுத்த எழுத்துக்கு ஈற்றயலடி பாடி, அதன் பின்பு கொடுத்த எழுத்துக்கு
இரண்டாமடி பாடி, அதன் பின்பு கொடுத்த எழுத்திற் பாடி முடிப்பது.

பாதமயக்கமாவது, மூவர் மூன்று ஆசிரியவடி சொன்னால், தானோரடி சொல்லிக் கிரியை கொளுத்துவது.