279

பாவிற் புணர்ப்பாவது, நால்வர் நான்கடிக்கு ஈற்றுரை சொன்னால், இவன்
நாலடிக்கு முதல் பாடிப் பொருண் முடிப்பது.

ஒற்றுப் பெயர்த்தல் என்பது, ஒரு மொழியைப் பாடி நிறுத்தி வைத்துப் பிறிதொரு பொருள்படப் பாடுவதும் பல பெயர் கூட்ட ஒரு பொருள் வரப் பாடுவதும் என இரண்டு வகைப்படும்.

ஒரு பொருட்பாட்டாவது, ஒன்றினையே துணித்துப் பாடுவது.

சித்திரப்பாவாவது, நான்கு கூடினவெல்லாம் பத்தாகவும்,  மூன்று கூடினவெல்லாம் பதினைந்தாகவும், பிறவாற்றானும் எண் வழுவாமற் பாடுவது.

'இருவ ரெழுநாள மாறமர்ந்தான் கோயி
லொருவனை யெட்டா வுவந்தேன்--பொருவிலா
நந்தியான் முக்கண்ணா னாற்கதி யொன்பானோ
டைந்துகலை தந்தா னறி.'
இதனை ஒன்பதறையாகக் கீறிக் கண்டுகொள்க.

இனி விசித்திரப் பாவாவது, எங்கும் ஏழறையாகக் கீறி,மேலொழுகு நுண்மொழி முதலாகிய எழுத்து ஒரு பொருள் பயக்க நிறுவி, அவ்வெழுத்துக்களே எங்கும் ஒழுகுங் கண்ணறையும் பாடமு நிறுவி, ஓரெழுத்துக்கு ஓரடி வரப் பாடுவது.

விகற்ப நடையாவது, வேறுபட்ட நடையுடைத்தாவது.

சருப்பதோபத்திரமாவது, எட்டெட்டெழுத்தின் அறை அறுபத்து நான்குவரக் கீறி, அவை மாலைமாற்றும் சுழிகுளமுமாய் வரப்பாடுவது. ஓரெழுத்து முதலாக ஒவ்வொன்று கலை சிறந்தேறிய எழுத்தின் முறையே பிறிது பொருள் பயக்கப் பாடுவது எழுத்து வருத்தனை.

'மரத்தினை யோரெழுத்துச் சொல்லுமற் றொன்று
நிரப்பிட நீரிற்பூ வொன்றா--நிரப்பிய
வேறோ ரெழுத்துய்க்க வீரரா சேந்திரனாட்
டாறா மெனவுரைக்க லாம்.'

மெய் வாழ்த்தும் இருபுற வாழ்த்தும் என வாழ்த்து இரண்டு வகைப்படும். மெய் வசையும் இருபுற வசையும் என வசையும் இரண்டு வகைப்படும்.