280

ஆசு கவியும், மதுர கவியும், சித்திர கவியும், வித்தார கவியும் எனக் கவிகள் நால்வகையாராவர். கடுங்கவி, இன்பகவி, அருங்கவி,பெருங்கவி எனவுமமையும்.

கமகனாவான், வல்ல நூலறிவினாலும், மதியினது பெருமையாலும், கல்லாத நூல்களையும் கற்றோர் வியப்பத் தந்துரைக்கும் புலவன் எனக் கொள்க.

வாதியாவான், காரணமும் மேற்கோளும் எடுத்துக் காட்டிப் பிறன் கோள் மறுத்துத் தன்மத நிறுத்திப் பாடுவோன்.

வாக்கியாவான், அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கையும் விரித்துச் சொல்லும் ஆசிரியன்.

அவையினமைதியாவது, நல்லோரிருந்த நல்லவையுந் தீயோரிருந்த தீயவையுமெனக் கொள்க. பாடுதன் மரபும், தாரணைப் பகுதியும் வன்ன மரபுள்ளும் தாரணை நாலுள்ளுங் கண்டு கொள்க.

*ஆனந்த முதலிய ஊனம் செய்யுளின் குற்றமாம் எனக் கொள்க. செய்யுளாவன, தனிநிலைச் செய்யுளும், தொடர்நிலைச் செய்யுளும், தனிப்பாதச் செய்யுளும் எனக்கொள்க.

'விளம்பின தியற்கை விரிக்குங் காலை
யாரியந் தமிழினொடு நேரிதி னடக்கி
யுலகின் றோற்றமு மூழியி னிறுதியு
மலகி றொண்ணூற் றறுவர தியற்கையும்
வேத நாலும் வேதிய ரொழுக்கமு
மாதி காலத் தரசுசெ யியற்கையு
மப்பா னாட்டா ரறியும் வகையா
லாடியும் பாடியு மமைவரக் கிளத்தல்.'

நரம்பாவன,

'குரலே துத்தங் கைக்கிளை யுழையிளி
விளரி தாரமென வேழு நரம்பே.'

பண்ணாவன, பாலையாழ், குறிஞ்சியாழ், மருதயாழ், செவ்வழியாழென நான்கு.


*'ஆனந்தம் எழுத்தானந்தம், சொல்லானந்தம், பொருளானந்தம், தூக்கானந்தம், தொடையானந்தம் எனப் பாட்டுடைத் தலைவனைப்பற்றி வரும். முதலிய என்றதனால், ஒன்பது வழுவும் ஆறு மலைவுங் கொள்க' என்பது பழைய குறிப்பு.