31

'பலவிற் சுவ்வும் கள்ளும்' என்பதனால் சுவ்வென்னும் பிரத்தியத்தைக் கொடுத்து மரம் நின்ற எனவும், கள்ளென்னும் பிரத்தியத்தைக் கொடுத்து மரங்கள் நின்ற எனவுமுடிக்க 'சிறப்புப் பலரிற் கள்ளொழிந்தன' என்பதனால், பிரகிருதிகளின் பின்பு அர் ஆர் அர்கள் ஆர்கள் கள் மார் என்னும் ஆறு பிரத்தியங்களுங் கொடுத்துப் பன்மையாக்கி, இவர்கள் சிலர் வேளாளர், இவர்கள் சிலர் பார்ப்பனர்கள், இவர்கள் சிலர் குறத்திகள், இவர்கள் சிலர் நம்பிமார்கள் என முடிக்க. கள் என்னும் பிரத்தியம் மார் என்னும் பிரத்தியத்தின் முன்னும் பின்னும் வரப்பெறும் இவை எல்லாம் வேண்டுமிடத்து இறுதி சிதைத்து முடித்துக்கொள்க.

'குலவெழுவாய்' என்று சிறப்பித்தவதனால், எழுவாய் வேற்றுமைப் பிரத்தியங்களிற் சுவ்வென்னும் பிரத்தியம் ஒழித்து ஒழிந்த ஆறு பிரத்தியமும், இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை ஈறாக ஆறு வேற்றுமைப் பிரத்தியங்களின் முன்பும் தொகையின்கண்ணும் ஒரோவழி வந்து நிற்கவும் பெறுமென்க. விழுமியான் விழுமியாள் விழுமியோர் என்றாகலுமுண்டு.

(5)

34. இதுவும் அது.

ஐயென் பதுகரு மத்திரண் டாவ ததுவொருகாற்
பைய வழிதரும் மூன்றோடொ டாலாம் பகர்கருத்தா
வைய நிகழ்கர ணத்தின் வரும்;குப் பொருட்டென்பது
மெய்திகழ் வேற்றுமை நான்காவ தாமிக்க கோளியிலே.

(இ-ள்.) ஐ என்பது இரண்டாம் வேற்றுமைப் பிரத்தியம்; அது கருமத்தின் காரகமாம்; அஃது ஒரோவழி அழிந்து நிற்றலுமுண்டு; அழிந்தாலும், எழுவாய் வேற்றுமையிற் சுவ்வேபோலத் தன் வேற்றுமைப் பொருளை விளக்கும். மூன்றாம் வேற்றுமைக்கு ஓடு ஒடு ஆல் என மூன்று பிரத்தியமுள; அவை கருத்தாவினுங் கரணத்தினும் வரும்; நான்காம் வேற்றுமைக்குக் கு பொருட்டு என்னுமிரண்டு பிரத்தியமுள; அவை கோளியென்னுங் காரகத்தின் வரும் (எ-று.)

வரலாறு:- சாத்தனை அழைத்தான், கொற்றியைக் கொடுத்தான், கடலை நீந்தினான் என்பன இரண்டாம் வேற்றுமையிற் கருமக் காரகமாம்.

'அது ஒருகாற் பைய வழிதரும்' என்பதனால், சோறுண்டான் - நீர் குடித்தான் என வேற்றுமைப் பிரத்தியமழிந்தும் வரும்.