36

அவதிப் பொருளிலே ஐந்தாம் வேற்றுமைப் பிரத்தியம் வருமாறு:

சாத்தனுழைநின்றுந் தீமை அகன்றது.
பெரியோரிடைநின்றுஞ் சினநீங்கிற்று.
மலையினின்றும் அருவி வீழ்ந்தது. என வரும்.

ஐந்தாம் வேற்றுமைக்கு இன் என்னும் பிரத்தியமும் வரும்:

மக்களிற்கொற்றனல்லன்.
மரத்திற்பனை நன்று.
ஊரின் நீங்கினான். என வரும்.

1"வானின் றுலகம் வழங்கி வருதலாற்
றானமிழ்த மென்றுணரற் பாற்று."

இஃது ஐந்தாம் வேற்றுமை உருபாகிய 2நின்றென்பதனால் முடிந்தது. இனி, தேவதத்தனாரிடைநின்று பொன் வந்தது என முதல் வேற்றுமையினுருவம் விளி வேற்றுமை ஒழித்தெங்கு முறப்பெறுதல் காண்க.

(7)

36. இதுவும் அது.

ஆயாளீ யேயவ்வொ டாவானோ லோயீ ரளபெடைகாள்
மாயா விளியி னுருபுகள்; மற்றிவை முன்னிலைக்கண்
ணேயாகும்; முன்சொன்ன வேழ்வேற் றுமையுமெல் லாவிடத்தும்
ஓயா தியல்கை யுணர்பெரி யோர்த முரைப்படியே.

(இ-ள்.) ஆய் ஆள் ஈ ஏ அ ஆ ஆன் ஓல் ஓய்ஈர் என்னும் உருபுகளும், இவற்றினளபெடைகளும், காள் என்னும் பிரத்தியமும் விளிவேற்றுமைக்குரிய. இவ்விளி வேற்றுமை முன்னிலைக்கண்ணே வரும். மற்றையேழுவேற்றுமையுந் தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் மூன்றிடத்தினும் வரும்(எ-று.)

விளித்தல் தன்னை நோக்குவித்துக் கொள்ளுதற் பொருட்டாம். 'ஓயாது' என்று விகற்பித்தவதனால், விளி வேற்றுமைப் பிரத்தியம் பின்பு வந்தால், முன்பு நின்ற பிரகிருதியினீறு ஒரோவிடத்து அழிதலுமுண்டு.


1. திருக்குறள், 11.

2. 'நிற்ப என்னும் வினையெச்சம் நின்று எனத் திரிந்து நின்றது என்பது பரிமேலழகர் கூற்று.' இது பழைய குறிப்பு.