48

3. தொகைப்படலம்1

44. தொகைநிலைத் தொடர்களும், வேற்றுமைத் தொகையின் வகையும்

நாமங்க ளிற்பொருந் தும்பொருள் நற்றொகை; அத்தொகைக்கண்
தாமங் கழியுமுன் சாற்றிய வேற்றுமை; வேற்றுமையைச்
சேமங்கொள் சார்பாக வெய்திய; சொல்லுஞ் சிலவிடத்துப்
போமங் கதன்பொருள் தன்னையெல் லார்க்கும் பொருட்படுத்தே.

(இ-ள்.) ஒரு பொருளை விளக்கி நிற்கும் பெயர்ச் சொற்கள் இரண்டு சொல்லாயும், பல சொல்லாயும் பொருந்திய பொருளால் ஒரு சொல்லாய்த் தொகும்; அவ்வாறு தொகுமிடத்து வேற்றுமை அழிந்தும், ஒரோவிடத்து வேற்றுமையும் வேற்றுமையைச் சார்வாகிய சொற்களும் அழிந்துந்தொகும்; தொகை எனினும் சமாசம் எனினும் ஒக்கும். வேற்றுமையும் வேற்றுமையைச் சார்வாகிய சொற்களும் அழிதற்குக் காரணம் அவை அத்தொகைச் சொல்லின் பொருளை விளக்குதற்பொருட்டு உச்சரிக்கப்படுதலால், அவை அழிந்தவிடத்தும் பொருளை விளக்கி நிற்றற்காகும் (எ-று.)

வரலாறு:-

மார்கழி திங்கள் - மார்கழித் திங்கள் என எழுவாய் வேற்றுமையிலும்;
குடியைத் தாங்கி - குடி தாங்கி என இரண்டாம் வேற்றுமையிலும்;
தாயொடு நால்வர் - தாய் நால்வர் என மூன்றாம் வேற்றுமையிலும்;
மரக்கலத்துக்குக் கல்லி = மரக்கலக் கல்லி,
மழையின்பொருட்டுக் குடை = மழைக் குடை,
குண்டலத்தின்பொருட்டுப் பொன் = குண்டலப் பொன்,
குதிரைப்பொருட்டுச் சம்மட்டி = குதிரைச் சம்மட்டி,
யானைப்பொருட்டுத் தோட்டி = யானைத்தோட்டி,
மாடத்தின்பொருட்டு ஓடு = மாடவோடு,
முயற்பொருட்டு வலை = முயல்வலை என நாலாம் வேற்றுமையிலும்;

ஆட்டினின்று கறந்த பால் = ஆட்டுப்பால் என்பது போல, எருமைப்பால், யானைமதம், பூநாற்றம், கடலமிழ்து, வாய்ச்சொல், எண்ணெய் என ஐந்தாம் வேற்றுமையிலும்;

கொற்றனுடைய மகன் = கொற்றன்மகன் என்பது போல, சாத்தன்வீடு, களக்கோல், மாங்காய், மரப்பனை, ஊர்ப்பொது என ஆறாம் வேற்றுமையிலும்;


1. இது தொகைகளைக் கூறும் படலம் என்றாம்.