52

யும், விதியாரிலக்கணத் தொகையும், சகமுன்மொழித் தொகையும், திகந்தராளத் தொகையும் எனப் பகுவிரீகித் தொகை எழுவகைப்படும் (எ-று.)

பின்மொழி எண்ணாவது, எண்ணினைப் பின் மொழியினுடையது; இருமொழி எண்ணாவது, முன்மொழியினும் பின்மொழியினும் எண்ணாய் வருவது; விதியாரிலக்கணத் தொகையாவது, தடுமாற்றத்தை இலக்கணமாக உடையது; சகமுன் மொழியாவது, வடமொழி எழுத்தடைவில் அகரத்தோடுங் கூடின முப்பத்திரண்டாம் வியஞ்சனத்தையும் முப்பத்து மூன்றாம் வியஞ்சனத்தையும் அடைவே ஒன்றாக உடையதொரு பதமாய் அப்பதத்தின் விகாரத்தோடுங் கூடி முப்பத்திரண்டாம் வியஞ்சனத்தை முன்னாக உடைய தொகையாம்; திகந்தராளமாவது, பெருந்திசைகளுக்கு நடுவாய்க் கிடந்த கோணங்களைக் குறித்துத் தொகுந் தொகையாம்; இவை ஏழும் யாவனொருவன் என்றும் யாதொன்று என்றும் வேறாய்க் கிடந்ததொரு மொழிக்குப் பொருளாகும். அல்லது தொகுத்தற் பொருட்டு வந்த மொழிகளுக்குப் பொருளாகா எனக் கொள்க.

வரலாறு:-

கல்லுத் தலையின்கண் யாதொரு மீனுக்குண்டு, அம்மீன் 'கற்றலை' எனவும், கழுத்திலாடை யாவனொருவனுக்குண்டு, அவன் 'கழுத்தாடை' எனவுஞ் சொல்வது, இரண்டு மொழியைத் தொகுத்தலால் இருமொழித்தொகை.

குரங்குகள் ஆடப்பட்ட துறை யாதொரூரில் உண்டு, அவ்வூர் 'குரங்காடு துறை' எனவும், மயில்கள் ஆடப்பட்ட துறை யாதொரூரில் உண்டு, அவ்வூர் 'மயிலாடுதுறை' எனவும் சொல்வது, பன்மொழியைத் தொகுத்தலால் பன்மொழித் தொகை.

'இன்னா' என்னுஞ் சொல்லினையுடைய நாற்பது கவி யாதொரு நூலின் உண்டு, அந்நூல் 'இன்னா நாற்பது' எனவும், இவ்வண்ணம் 'இனிய நாற்பது' 'கார் நாற்பது' 'களவழி நாற்பது' எனவும் வருவன, பின்மொழிகள் எண்மொழியாதலால் பின்மொழி எண் தொகை.

இருவராதல், மூவராதல் அன்றி, யாவர் சிலரைக் கருதி இருவர், மூவர் எனவும், இவ்வண்ணம் ஐந்தாறு எனவும், ஏழெட்டுப் பத்து எனவும் வருவன, இருமொழியும் எண்ணாய் நின்றமையால் இருமொழி எண் தொகை.