64

வரலாறு:-

'பறையன்' என்னுஞ் சாதிச்சொல், அக்குலத்துள்ளாள் என்னும் பெண்மைப் பொருண்மேல் அச்சி என்ற பிரத்தியம் பெற்றுப் 1பறைச்சி என வரும்.

இவ்வண்ணம், வெள்ளாட்டி, கம்மாட்டி எனவும்; பார்ப்பனி, வண்ணாத்தி, நட்டுவத்தி, கைக்குளத்தி, குறத்தி, ஒருத்தி, நல்லாள், தீயாள், நல்லள், தீயள், சாத்தி, கொற்றி, கள்ளிச்சி, பேய்ச்சி எனவும் வரும்; பிறவுமன்ன.

வனிதா, தாரா, உமா, மாலா, சாலா என வடநூலில் ஆகாராந்தமாய்ப் பெண்ணைக் குறித்துக் கிடந்த சொற்கள் தமிழில் ஐகாராந்தமாகி, வனிதை, தாரை, உமை, மாலை, சாலை என முடியும். தேவதை, கலை, சீதை என வருவனவும் அது.

நாகபட்டினம், தஞ்சாவூர், உறையூர் எனக் கிடந்த ஊர்ப்பெயர்ச் சொற்கள் கடை குறைந்து நாகை, தஞ்சை, உறந்தை என ஐகாரத்தான் முடியும்.

வடநூலிற் பெண்பாலைக் குறித்த நதீ, குமரீ என்னும் ஈகாராந்தச் சொற்கள் நதி, குமரி எனக் குறுகும்.

(5)

57. வடசொற்கள் தமிழில் வழங்கும் விதம்

முந்திய வர்க்கங்க ளைந்தினு முன்னொன்றின் மூன்றடங்கும்;
பந்தியில் தெய்வ மொழிமுதல் யவ்வேல் பகருமிய்யாம்;
வந்திடும் லவ்விற் குகரமு மாகும்; வரில்ரகரம்
அந்த இரண்டொ டகரமு மாமென்பர் ஆயிழையே !

(இ-ள்.) க ச ட த ப என்பவற்று ஒவ்வொன்றையே கிடப்பினும் உரப்பியும் எடுத்தும் கனைத்தும் மூக்கினும் ஐந்து விதமாகச் சொல்லப்படுகின்ற ஐந்து வருக்கங்களினும் முன்படையக் கிடப்பினாற் சொல்லப்படுகின்ற ஒன்றின்கண்ணே அதன் பின்னே நின்ற மூன்றெழுத்தும் அடங்கும்; இஃது ஆதேசமென்னும் விகாரமெனக் கொள்க; யவ்வென்னும் எழுத்தை முதலாக உடைய வடமொழியின் முன் இகரம் வரப் பெறும்; லவ்வென்னும் எழுத்தை முதலாக உடைய வடமொழியின் முன் இகரமும் உகரமும் வரப்பெறும்; ரவ்வென்னும் எழுத்தை முதலாக உடைய வடமொழியின் முன் அகர இகர உகரங்கள் மூன்றும் வரப் பெறும் (எ-று.)


1'இது சிப்பிரத்தியத்தான் முடிந்ததோர் தத்திதம். அச்சிப்பிரத்தியத்திற்கு உதாரணம் வேட்டுவச்சி, துளுவச்சி, அம்பட்டச்சி, ஆரியச்சி முதலிய பிற மொழிகளாம்,' என்பது பழைய குறிப்பு.