65

இவையெல்லாம் 'ஆகமம்' என்னும் விகாரம் எனக் கொள்க. 'இவையிற்றைத் தத்திதப் படலத்து ஓதல் வேண்டியது என்னை?' எனின், இவையுந் தத்திதப் பிரத்தியத்தான் முடிகையினால் என்க.

வரலாறு:-

கந்தம் என்னுஞ்சொல் கவ்வருக்கத்து மூன்றாவதற்கு முதல் ஆதேசமாயும், தவ்வருக்கத்து நாலாவதற்கு முதல் ஆதேசமாயும் அம்மென்னுந் தத்திதப் பிரத்தியத்தான் முடிந்தது. இது வேறொரு பொருண்மேலாய் முடிந்தது அன்று; தன் பொருளிலே முடிந்தது. வடமொழியுடையானும் தன் 1 தன்பொருளிலே சுப்பிரத்தியத்தான் நீலமே நீலகமாயிற்று என்று முடிக்கும். இப்படியே கடகம், சத்திரம், சலம், மாடகம், ஆடகம், தானம், தனம், பாணம், பணம், பகவான் என வரும்.

இயக்கர் எனவும்; இலங்கை , உலோகம் எனவும்; அரங்கம், இராவணன், உரோமம் எனவும் வரும்.

(6)

58. இதுவும் அது.

முதலொற் றிரட்டிக்கு முப்பத்தொன் றெய்திடின்; முன்பினிஃ
திதமிக்க வைந்தாமெய் யாகுந் தனியே யிதனயற்குப்
பதமிக்க சவ்வரு மெண்ணான்கு தவ்வாமுப் பானுறுமூன்
றதனுக்கு லோபமும் யவ்வொடு கவ்வு மறைவர்களே.

(இ-ள்.) வடமொழியில் எழுத்தடைவில் கவ்வென்னு முதல் வியஞ்சனம் முப்பத்தொன்றாமெய் தனக்கு முன்னே வரினும், பின்னே வந்து முப்பத்தைந்தாய் நிற்பினும், ஈரிடத்தும் இரட்டிக்கும். இரட்டிக்குமிடத்து, 'தமிழில் இல்லன போம்' என்னும் இலக்கணத்தான் மேலிட்ட முப்பத்தொராமெய் அழியும்; மொழியின் கண் நடுவிலே தனியே வரில் ஐந்தா மெய்யாகிய டகாரமாகும். இவ்வியஞ்சனத்துக்கு அயலாய் நின்ற முப்பதாம் முப்பத்திரண்டாம் வியஞ்சனங்கள் சவ்வாம். முப்பத்திரண்டாம் வியஞ்சனம் தவ்வாம்; முப்பத்து மூன்றாம் வியஞ்சனத்துக்கு ஒரோவழி உலோபமாம்; ஒரோவழி யவ்வுங் கவ்வுமாம் (எ-று.)

வரலாறு:-

பக்கம், தக்கன், இயக்கன் எனவும்; பரிக்காரம், நிக்காரம் எனவும்; விடபம், புருடன் எனவும்; சங்கு, சாலை, சதயம், சத்தம் எனவும்; சகலம், சங்கம், சிங்கம், சத்தியம் எனவும்; வத்தன், தாதன் எனவும்; அரி, அரன், ஆரம் எனவும்; வயிதேவி, மயிமை, மயிதலம் எனவும்; மோகம், மகிடம் மகிமை எனவும் வரும்.


1. 'பிரத்தியத்திலே சுப்பிரத்தியத்தா னலமே நிலமாயது' என்பது முன் பதிப்புப் பாடம்.