66

சவ்வருக்கத்து மூன்றாம் எழுத்து யகாரமாய்ப் பங்கயம் என முடிவதும், முப்பத்தோராம் வியஞ்சனம் மொழி முதலிற் சகரமாய்ச் சட்டி என முடிவதும் உண்டு.

(7)

59. இதுவும் அது.

கூட்டெழுத் தின்பின் யரலக்கள் தோன்றிடிற் கூட்டிடையே
ஓட்டெழுத் தாகப் பெறுமொ ரிகாரம்;வவ் வுக்கொருவ்வாம்;
மீட்டெழுத் துத்தமி ழல்லன போம்வேறு தேயச்சொல்லின்
மாட்டெழுத் தும்மித னாலறி மற்றை விகாரத்தினே.

(இ-ள்.) வடமொழியில் இரண்டு வியஞ்சனங் கூடி வரும் இடத்துப் பின்பு நிற்கின்ற ய ர ல என்னும் மூன்று கூட்டெழுத்தைப் பிரித்து நடுவே இகரம் ஆகமம் ஆகும்; வகரங் கூட்டெழுத்திற் பின்னாய் வரின் நடுவே உகரம் ஆகமம் ஆகும்; இவையிற்றில் எல்லாம் முன்பின் எழுத்து இரட்டித்து வரும்; வடமொழியை வைத்துத் தமிழாக்கும் இடத்து இவ்விலக்கணத்தால் ஆதேசம் ஆவனவாகத் தமிழ் ஒழிந்தவற்றை அழிக்க. ஆரியம், வடுகு, தெலுங்கு, சாவகம், சோனகம், சிங்களம், பப்பரம் இவை முதலாகிய பிற தேயச் சொற்களையுந் தமிழாக்கும் இடத்து இவ்விலக்கணத்தானே முடிக்க (எ-று.)

வரலாறு:-

வாக்கியம், வாச்சியம், சத்தியம், நாட்டியம் எனவும்; புத்திரன், சத்திரம் எனவும்; சுக்கிலம், ஆமிலம் எனவும்; யகர ரகர லகரங்கள் இடையே இகரம் பெற்று வந்தன.

பக்குவம் என வகரங் கூட்டெழுத்திற்குப் பின்பு நடு ஓர் உகரம் பெற்றது.

மகர நகரங்கள் கூட்டெழுத்தின் பின் வருங்கால், முறையே பதுமம், அரதனம் என உகர அகரங்கள் பெற்று முன்னெழுத்து மிகாமல் முடிவனவும்; நகரம் - இரத்தினம் என முன்னெழுத்து இரட்டித்து இகரம் பெற்று முடிவதும்; இவை போல்வன பிறவுங் கொள்க.

இவ்விலக்கணத்தால் பக்கம் என முப்பத்தொன்றாம் வியஞ்சனம் 'தமிழ் எழுத்தல்லன போம்'என்றவாற்றானே போனதும், 'முதலொற்றிரட்டிக்கு முப்பத்தொன் றெய்திடில்' என்றவாற்றானே இரட்டித்துக் காண்க. 'வட்டா' என்னும் ஆரிய தேயச் சொல்லு, வட்டை என வந்தவாறும், 'முருங்கா' என்னுஞ் சிங்களச்சொல் முருங்கை என வந்தவாறுங் கொள்க.

(8)

தத்திதப்படலம் முற்றும்.