69

62. தாதுக்களோடு வான் முதலிய பிரத்தியங்கள் வந்து கூடி முடியும் வகை

வானுமை யம்புகை வல்லிவு தல்லல்லன் பானலைகுத்
தான்விதி வைசி முதல்சுப் பிரத்தியந் தாதுவின்பின்
ஆன வினைக்குறிப் புக்கா ரகத்தி லணையுமென்ப;
ஊனமில் சொல்லொன்று முன்புநின் றாகலு முண்டென்பரே.

(இ-ள்.) வான், உ, மை, அம், பு, கை, வல், இ, வு, தல், அல், அன், பான், அலை, கு, தான், வி, தி, வை, சி என இவை முதலாகும் பிரத்தியமுஞ் சுப்பிரத்தியமும் தாதுவின் பின் வினைக்குறிப்புப் பொருளினுங் காரக பதப் பொருளினும் வரப்பெறும்; இப்படித் தாதுக்களின் பிரத்தியம் பின் பெற்று முடியுமிடத்து மற்றொரு பெயர்ச்சொல்லு முன்பு நின்றும் முடியும் (எ-று.)

வரலாறு:-

போவான், அறிவான், செய்வான், கருதுவான் எனவும்;
பூச்சு, நாற்று எனவும்;
மென்மை, வன்மை எனவும்;
ஆட்டம், நாட்டம் எனவும்;
கற்பு, சிரிப்பு எனவும்;
அறிக்கை, நடக்கை எனவும்;
இளவல், கறுவல் எனவும்;
காணி எனவும்;
அறிவு, கரவு எனவும்;
போதல் எனவும்;
செல்லல் எனவும் ;
ஊணன் எனவும்;
காப்பான் எனவும்;
சுடலை எனவும்;
போக்கு எனவும்;
கடந்தான் எனவும்;
கேள்வி எனவும்;
உண்டி எனவும்;
போர்வை எனவும்;
காட்சி, மாட்சி, நீட்சி எனவும் வரும்.

முதல் என்றமையால் கொல்லை, கலை என ஐ முதலிய வருவனவுங் கொள்க. கலா என்னும் வடமொழி கலையாயிற்று எனினும் அமையும்.