7

இவற்றுள் உரத்தை வல்லினமும், சிரத்தை ஆய்தமும், கண்டத்தை உயிரும், இடையினமும், மூக்கை மெல்லினமும் பொருந்துமெனக்கொள்க. முயற்சியுள் ஓரெழுத்திற்குப் பல முயற்சியுளவாதலின், எழுத்தெழுத்தாய் முயற்சி கூறின் ஈண்டுப் பெருகும் என விடுத்தனம் என்க.

7. முதனிலை (மொழிக்கு முதலாகும் எழுத்துக்கள்)

ஆவி யனைத்துங் கசத நபமவ் வரியும்வவ்வில்
ஏவிய எட்டும்யவ் வாறும்ஞந் நான்கும்எல் லாவுலகும்
மேவிய வெண்குடைச் செம்பியன் வீரரா சேந்திரன்றன்
நாவியல் செந்தமிட் சொல்லின் மொழிமுதல் நன்னுதலே!

(இ - ள்.) உயிரெழுத்துப் பன்னிரண்டும், ககார சகார தகார நகார பகார மகார வர்க்கங்களும், வகார வர்க்கத்தில் உ ஊ ஒ ஓ அல்லாத எட்டெழுத்தும், யகார வர்க்கத்தில் அ ஆ உ ஊ ஓ ஓளவாகிய ஆறெழுத்தும், ஞகார வர்க்கத்தில் அ ஆ எ ஒ ஆகிய நான்கெழுத்தும் ஆகிய இவையனைத்தும் எல்லா உலகுந் தன்வெண் கொற்றக்குடை நிழற்கீழ் ஆளாநின்ற வீரசோழ மகாராசாவினுடைய நாவினிடமாகச் சொல்லப்பட்ட செந்தமிட்சொல்லுக்கு மொழிக்கு முதலாகிய எழுத்துக்களாம் (எ - று.)

'நன்னுதலே!' என்பது மகடூஉ முன்னிலை.

(7)

8. இறுதிநிலை (மொழிக்கு ஈறாகும் எழுத்துக்கள்)

ஈறும் மகர ணகரங்க டாமும் இடையினத்தில்
ஏறும் வகரம் ஒழிந்தைந்தும் ஈரைந் தெழிலுயிரும்
வீறு மலிவேங் கடங்கும ரிக்கிடை மேவிறறென்று
கூறுந் தமிழினுக் கீற்றெழுத் தாமென்பர் கோல்வளையே !

(இ - ள்.) பதினெட்டாமெய்யாகிய னகரவொற்றும், மகார ணகார வொற்றுக்களும், இடையினவெழுத்தில் வகர ஒற்றொழிந்த மற்ற ஐந்தொற்றும், உயிரெழுத்துக்களுள் எகர ஒகர மொழிந்த மற்றப் பத்தெழுத்தும் ஆகிய இவையனைத்தும் குணகடல் குமரி குடகம் வேங்கடம் என்னும் இந்நான்கு எல்லைக்குள்ளும் வழங்காநின்ற செந்தமிட்சொல்லுக்கு மொழிக்கீறாகிய எழுத்துக்களாம் (எ - று.)

'கோல்வளையே!' என்பது மகடூஉ முன்னிலை.

(8)