75

எதிர்காலத்துக்குச் சொன்ன பிரத்தியம் மூன்று காலத்துக்குமாம். அது பிரயோகத்திற் காண்க.

(7)

67. துமந்தப் பிரத்தியம்

மன்னுந் துமந்தம் பொருட்டுக்கப் பான்தற்கு வானவென்று
பன்னு மெழிற்றாது வின்பின்பி லாகும்; பகரில்முன்பு
துன்னிய தாதுத் தொழிற்பொருட் டாகவென் னுந்தொடர்ச்சி
உன்னிய போதென்று தெய்வப் புலவ ருரைத்தனரே.

(இ-ள்.) பொருட்டு, க, பான், தற்கு, வான், அ என்னும் ஆறு பிரத்தியங்களும் துமந்தப் பெயரால் தாதுக்களின் பின்பு வரும். இவை ஆமிடத்து இப்பிரத்தியத்தான் முன்பு நின்ற தாதுவிற் கிரியாபதப் பொருளிற்குத் தொடர்ச்சி கருதின பொழுதாம் (எ-று.)

உண் என்னுந் தாதுவின்  பின் துமந்தப் பிரத்தியம் ஆமிடத்து உண்கை என்னுந் தொழிலே குறித்தாம் என்பது. இச்சொல்லப்பட்ட துமந்தப் பிரத்தியாந்த பதங்களும் மற்றொரு பதத்திற்கு உறுப்பாக அன்றி வாரா என்க.

வரலாறு :-

உண்ணுதற்பொருட்டு வந்தான், ஊட்டுவித்தற்பொருட்டுப் போனான், நிற்கவேண்டி இருந்தான், கற்கத் தாற்பரியத்தான், அறிதற்குத் துணிந்தான், போதற்கு நினைத்தான், அறிவான் கருத்துண்டு, போவான் கருத்தில்லை, உண்ண வல்லன், பேச வல்லன், படிப்பான் வந்தான், கொடுப்பான் நினைந்தான் என வரும்.

கருதினான் உண்ண, நினைந்தான் சொல்ல எனப் பதங்களின் பின்னும்; உண்ணக் கருதினான், சொல்ல நினைந்தான் என நடுவிலும் வருதல் காண்க.

துமந்தமாவது நாலாம் வேற்றுமையின் அல்லது வாராமையின், அதனையும் இதனோடு ஒப்பித்தே முடிக்க. இப்பொருள் வடமொழித் தாதுவில் பாதும், யாதும் எனத் தும் பிரத்தியத்தான் முடிந்தமையில், இதனைத் துமந்தப் பிரத்தியம் என்றார்.

(8)

68. துவாந்தப் பிரத்தியம்

ஆவுமிட் டுந்துவ்வு முவ்வினொ டிய்யு மரும்புலவர்
ஏவுங் கருத்தா விருதொழிற் கொன்றிடின் முன்புநின்று
மேவும் பொருட்டாது வின்பின் வரும்மிக்க தன்பெயரே
பாவுந் துவாந்தம தாமென் றுரைப்பர் பனிமொழியே !