76

(இ-ள்.) ஆ, இட்டு, து, உ, இ என்னும் ஐந்து பிரத்தியமும் ஒரு கருத்தா உடையனவாய் இரண்டு தாது உள்ள பொழுது முன்பு நின்ற தாதுவின்கண் வரும்; அவையிற்றின் பெயர் துவாந்தமாம் (எ-று.)

நீத்து வா, பாத்து வா என்னும் வடமொழித் தாது துவாந்தப் பிரத்தியத்தால் வந்தமையின், துவாந்தம் என்றார்.

வரலாறு :-

உண்ணாப் போனான், உண்டிட்டுப் போனான், உண்டு போனான் எனவும்;

புகாப் போனான், புக்கிட்டுப் போனான், புகுந்துபோனான், புக்குப்போனான் எனவும்;

சொல்லா நின்றான், சொல்லிட்டு நின்றான், சொற்று நின்றான், சொல்லி நின்றான் எனவும் வரும்.

பல தாது வரும் போது பின்பிலதனைக் குறித்து முன்பிலதனுக்கு ஆக்குக. உண்டு தின்று உலாவி யிருந்து போனான் எனக் கொள்க.

(9)

69. இடைச்சொற்கள் நின்று முடியும் விதம்

இல்லையுண் டாலில் லிவைமுத லாவிடைச் சொற்களுக்கோர்
எல்லையுண் டாக வியற்றவொண் ணாவிசை யும்பொருளும்
ஒல்லையுண் டாகநிற் கும்மிட முந்தேர்ந் திவற்றொடொக்கச்
சொல்லையுண் டாக்குக வென்பது நூலின் துணிபொருளே.

(இ-ள்.) இல்லை, உண்டு, ஆல், இல் என்னும் இவை முதலாய்க் கிடந்த இடைச்சொற்கள் இன்னதென்று வரையறுக்கப் படாவாதலால், அவையிற்றினுக்கு இசையும் பொருளும், பொருந்தி நிற்கும் இடமும், உலகத்தோடு ஒக்கத் தேர்ந்து அறிந்து காட்டின சொல்லோடும் ஒக்க இடைச்சொற்களை உளவாக்கி முடிக்க என்பது இலக்கண நூல்களின் துணிபாம் (எ-று.)

சில இடைச்சொல் கடையில் நிகழும்; சில இடைச்சொல் அருகினின்று சொல்லிற்குறுப்பாம்; சில தாமே பொருள் தந்து நிற்கும்; சார்வில்லை, சோர்வில்லை, சார்வுண்டு, சோர்வுண்டு எனவும்; அறிந்தால், பிரிந்தால், அறியில், பிரியில் எனவும் வரும். பிறவும் அன்ன. இல்லை, உண்டு, ஆல், இல், அ, ஆன் எனவும்; இன்றி, இன்னம், போலும், ஆம், ஆக்கும், ஏ, ஓடு, வாழி, சாற்றி, நனி, ஓங்கு எனவும் பிறவாற்றானும் வரும்.

(10)