77

70. தடைப்பொருளில் பிரத்தியம் வரும் வகை

ஆனாளா ரார்களொ டாதா விலன்மற் றிலளிலரும்
தானா மிலர்க ளிலதில தாதுத் தடைப்பொருட்கண்
மேனா முரைத்த மரபே வரும்;மிக்க வாதொழிமுன்
நானா வுளமற்று நற்றடை மன்னும் பிரத்தியமே.

(இ-ள்.) ஆன், ஆள், ஆர், ஆர்கள், ஆது, ஆ எனவும்; இலன், இலள், இலர், இலர்கள், இலது, இல எனவும் தடைப்பொருள் விளக்குந் தாதுவின் பின் முன் நாம் சொன்ன மரபே வரும்; ஆதொழி முதலாக மற்றும் பல பிரத்தியங்களும் உள தடைப்பொருளின் நிகழ்வன (எ-று.)

'மரபே வரும்' என்றது முன்பு சொல்லப்பட்ட ஒருவன், ஒருத்தி, சிறப்பு, பலர், ஒன்று, பல என்னும் ஆறு சொல் அடைவே முன்பாறிற்கும் பின்பாறிற்குஞ் சொன்னவையாம். முன்னைய ஆறும் எதிர்காலத் தடைப் பிரத்தியம். பின்னைய ஆறும் தகரவொற்றுப் பெற்று இறந்தகாலத் தடைப்பிரத்தியமும், ககரவொற்றுப் பெற்று நிகழ்காலப் பிரத்தியமுமாம்.

வரலாறு :-

நடவான், நடவாள், நடவார், நடவார்கள், நடவாது, நடவா எனவும்; நடந்திலன், நடந்திலள், நடந்திலர், நடந்திலர்கள், நடந்திலது, நடந்தில எனவும்; நடக்கிலன், நடக்கிலள், நடக்கிலர், நடக்கிலர்கள், நடக்கிலது, நடக்கில எனவும் வரும்.

'ஆதொழி முன் நானாவுள' என்பதனால், நடவாதொழி, நில்லாவழி, மாயாப் புகழ், இது நடக்குதில்லை, இவை நடப்பனவன்று எனவும்; பிறவாற்றானும் வருவன கொள்க. தாதுக்கள் பல இணைந்து வரும்போது நில்லாதே போனான், வாராதேயிருந்தான் என ஆது எனும் பிரத்தியத்தால் துவாந்தமாக்கி உலகிற்கேற்க முடிக்க.

(11)

தாதுப்படலம் முற்றும்.