81

வரலாறு :-

உறங்குவான், உறங்குவாள், உறங்குவார், உறங்குவார்கள், உறங்குவது, உறங்குவன எனவும்; உண்பான், உண்பாள், உண்பார், உண்பார்கள், உண்பது, உண்பன எனவும் வரும்.

(5)

76. முன்னிலை தன்மை இறந்த கால வினைகளில்
பிரத்தியங்கள் வருமாறு

தாயாயுந் தீரீருஞ் சாற்றிய தீர்களொ டீர்களுமாஞ்
சாயாத முன்னிலை யின்னிறப் பாம்;தன்மை தன்னிறப்பில்
தேயாத தேனேனுந் தேமேமுந் தோமோமு மாகும்என்ப
வேயார் பொதியத் தகத்திய னார்சொன்ன மெய்த்தமிழ்க்கே.

(இ-ள்.) தாய் ஆய் தீர் ஈர் தீர்கள் ஈர்கள் என்பன இறந்த கால முன்னிலைக் கிரியாபதம் மூன்றிற்கும் ஒன்றிற்கு இரண்டாக வரும்; தேன் ஏன் தேம் ஏம் தோம் ஓம் என்பன இறந்த காலத்தன்மைக் கிரியாபதமூன்றிற்கும் ஒன்றிற்கு இரண்டாக வரும் (எ-று.)

வரலாறு:- நீ உண்டாய், நீர் உண்டீர், நீங்கள் உண்டீர்கள் எனவும்; உறங்கினாய், உறங்கினீர், உறங்கினீர்கள் எனவும்; நான் உண்டேன், நாம் உண்டேம், நாங்கள் உண்டோம் எனவும்; உறங்கினேன், உறங்கினேம், உறங்கினோம் எனவும் வரும்.

(6)

77. முன்னிலை தன்மை நிகழ் கால வினைகளில்
பிரத்தியங்கள் வருமாறு

கிறாஅய்நின் றாய்கிறீர் நின்றீர் கிறீர்கள்நின் றீர்களுமாய்
இறாநின் றனமுன் னிலையி னிகழ்ச்சி; இதன்கண்தன்மை
கிறேஎன்நின் றேன்கிறேம் நின்றேம் கிறோமுநின் றோமுமென்றாம்
தெறாநின்ற கட்பவ ளந்திகழ் வாய்நற் றிருந்திழையே !

(இ-ள்.) கிறாய், நின்றாய், கிறீர், நின்றீர், கிறீர்கள், நின்றீர்கள் என இவையாறும் நிகழ் கால முன்னிலைக் கிரியாபதம் மூன்றிற்கும் ஒன்றிற்கு இரண்டாக வரும்; கிறேன், நின்றேன், கிறேம், நின்றேம், கிறோம், நின்றோம் என்பவை நிகழ் காலத் தன்மைத்தொழிற்சொல் மூன்றிற்கும் ஒன்றிற்கு இரண்டாக வரும் (எ-று.)

வரலாறு:- உண்கிறாய், உண்கிறீர், உண்கிறீர்கள் எனவும்;
உண்ணா நின்றாய், உண்ணா நின்றீர், உண்ணா நின்றீர்கள் எனவும்;
உண்கிறேன், உண்கிறேம், உண்கிறோம், எனவும்;
உண்ணாநின்றேன், உண்ணாநின்றேம், உண்ணாநின்றோம் எனவும் வரும்.

(7)