87

திணை இரண்டாவன, உயர்திணையும், அஃறிணையும்.

1"உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை யென்மனா ரவரல பிறவே
ஆயிரு திணையி னிசைக்குமன சொல்லே."
2"ஆடூஉ வறிசொல் மகடூஉ வறிசொல்
பல்லோ ரறியுஞ் சொல்லொடு சிவணி
அம்முப் பாற்சொல் லுயர்திணை யவ்வே."
3"ஒன்றறி சொல்லே பலவறி சொல்லென்
றாயிரு பாற்சொல் லஃறிணை யவ்வே."

என்பதனாலறிக.

பாலைந்தாவன, ஆண்பாற் சொல்லும், பெண்பாற் சொல்லும், பலர்பாற் சொல்லும், ஒன்றன்பாற் சொல்லும், பலவின்பாற் சொல்லும் எனக் கொள்க.

வழுவேழாவன,

"திணைபால் மரபு வினாச்செப்புக் காலம்
இடனோடே ழாகு மிழுக்கு."

என்பதாலறிக.

திணை வழுவாவது, எருது கிடந்தான், சாத்தன் வந்தது என உயர்திணையும் அஃறிணையும் தம்முள்ளே மயங்கச் சொல்லுதல்.

பால் வழுவாவது, கொற்றன் கிடந்தாள், சாத்தி கிடந்தான் என ஐந்து பாலையுந் தம்முள் மயங்கச் சொல்லுதல்.

மரபு வழுவாவது, எருமையிலண்டம், குதிரைச் சாணகம் என மரபு பிழைக்கச் சொல்லுதல்.

வினா வழுவாவது, 'சந்திரனைப் பாம்பு தீண்டுவது இரவோ, பகலோ?' என வினாவுதல்.

செப்பு வழுவாவது, 'மதுரைக்குப் போக வழியேது?' என்றாற்குக் 'குதிரைக்குப் புல் பறிக்கிறேன்' என்றல்.

கால வழுவாவது, இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என்னும் மூன்று காலமும் தம்முள் மயங்கச் சொல்லுதல்.

அது 'நாளைப் போனான்' என்றாற்போல வருவது.

இட வழுவாவது, தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் மூன்றிடமும் தம்முள் மயங்க வருவது.

அது, 'நீ உண்டேன், நான் போவாய், அவனறிவேன்' எனச்சொல்லுதல்.


1. தொல். சொல், சூ. 1.
2. தொல். சொல். சூ. 2.
3. தொல். சொல். சூ. 3.