88

ஆறு ஒட்டாவது, ஆறு தொகை; அவை வேற்றுமையழிந்து தொக்க வேற்றுமைத் தொகையும், உம்மை அழிந்து தொக்க உம்மைத் தொகையும், வினை அழிந்து தொக்க வினைத் தொகையும், பண்பு வர்க்கம் அழிந்து தொக்க பண்புத் தொகையும், உவமை அழிந்து தொக்க உவமைத் தொகையும், வந்த மொழி அன்றிப் பிறமொழி அழிந்து தொக்க அன்மொழித் தொகையும் ஆம்.

மூன்று காலமாவன, எதிர் காலம், நிகழ் காலம், இறந்த காலம் என இவை.

இடம் மூன்றாவன, தன்மை, முன்னிலை, படர்க்கை.

இனி இரண்டிடமாவது, வழக்கிடமும், செய்யுளிடமும் என இவை. வழக்கிடமாவது, தமிழ் வழங்கி வரும் இடத்து வழங்கி வருகிற வழக்கு. செய்யுளிடமாவது, வழக்கிற் சிறுபான்மையான் வந்து செய்யுட்களின் நிகழும் நிகழ்ச்சி எனக் கொள்க.

(1)

85. இதுவும் அது.

திணைபால் மரபு வினாச்செப் பிடஞ்சொல்
இணையா வழுத்தொகையோ டெச்ச--மணையாக்
கவினையபார் வேற்றுமையுங் காலமயக் குங்கொண்
டவிநயனா ராராய்ந்தார் சொல்.

எனப் பதின்மூன்றால் ஆய்ந்தார் அவிநயனார். இவற்றுள் தொல்காப்பியனார் ஆராய்ந்தன நீக்கி மயக்கமும், சொல்லும், செப்பும், வினாவும், எச்சமும், மரபும் ஏற்றமாகச் சொன்னார்.

மயக்கமாவது, வேற்றுமை மயக்கமும், இடமயக்கமும், காலமயக்கமும் முதலியவாம் எனக் கொள்க.

சொல்லாவன, பெயர்ச் சொல்லும், பெயர்த் திரிசொல்லும், தொழிற்சொல்லும், தொழில் திரிசொல்லும், இடைச் சொல்லும், உரிச்சொல்லும் எனக்கொள்க.

செப்பும் வினாவும் ஆவன, அறிதல், அறியாமை, ஐயப்படுதல் தொடக்கத்தனவும்; நேர்தல், மறுத்தல் தொடக்கத்தனவுமாம்.

எச்சமாவது, பெயரெச்சம், தொழிலெச்சம் என இரண்டாம்.

மரபாவது, ஆண்மைப் பெயர் வரலாறு, பெண்மைப் பெயர் வரலாறு, தொழிற்பெயர் வரலாறு, உவமைப் பெயர் வரலாறு, விரவுப் பெயர் வரலாறு எனக் கிடந்தவெனக் கொள்க.

(2)

சொல்லதிகாரம் முற்றும்.