91

புறப்பொருளுக்கும், புறப்புறப் பொருளுக்கும் ஏற்கும் உரை அறிந்துகொள்க (எ-று.)

இவற்றுள் சட்டகமாவது, 'இஃதென்ன சட்டகம்?' என்றால், யாப்பதிகாரத்திற்கிடந்த முதல் வரி மொழி வகை கோள் உட்பெறு பொருள் என்றபடியே செய்யுளைத் தெரிந்து இன்ன சட்டகம் என்று சொல்வது.

திணையாவது, 'எந்நிலம் பற்றி வந்தது?' என்றால் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்து நிலத்தில் இஃதிந்நிலம் பற்றி வந்ததென்று சொல்வது.

(5, 6)

92--96. ஐந்து திணைக்கும் உரிய முதல் கரு உரிப்பொருள்கள்

மலையிருள் முன்பனி கூதிர்வெற் பன்கண மூங்கில்மஞ்ஞை
இலைமலி வேங்கைசெங் காந்த ளிலவ மிகல்முருகன்
சிலைமலி குன்றுவர் தேனே புணர்தல் தினைசுனையுங்
கொலைமலி யானை குறிஞ்சியென் றின்ன குறிஞ்சியிலே.

ஓதிய வேனி லொடுபின் பனியகில் வெம்பரலே
தீதியல் வேடர் கலையொள் விடலைதிண் பாலையத்தங்
கோதியல் செந்நாய் பருந்தொடு கொம்பனை யார்ப்பிரிதல்
வாதியற் கன்னி குறும்பர்வெம் பாலை மடவரலே !

காடுகார் மாலை யிடையர் முதிரைகான் யாறுமுல்லை
நீடுமால் கொன்றை நிரைமேய்த்த லோடு நெடுங்குருந்தங்
கேடில்கார் தோன்றி சிறுபான் கிழத்தி மனையிருத்தல்
பீடுசேர் புன்கு பிறவுமுல் லைத்திணை பெண்கொடியே !

பொற்றா மரையிந் திரன்பொய்கை பூந்தார் பழனஞ்செந்நெல்
வற்றா வெருமை வளர்பனி நீர்நாய் 1வடமகன்றில்
தெற்றா மனையூட லூரன் கடைசியர் செங்கழுநீர்
சுற்றா மருதத் திணையிலுண் டாவன தூமொழியே !

மீனே கடல்பனி கொண்கன் திமிலம் விளரிநிலாக்
கானே தரும்புன்னை கண்டலன் னஞ்சுறாக் காதலுப்பு
வானோர் வருணன் முதலை நுளைய ரிரங்கல்கைதை
தேனே தருமொழி யாய்! அந்தி நெய்தல் தெளிந்தறியே.

(இ-ள்.) இவையிற்றால் இன்ன திணையென்றறிக. (எ-று.)


1. "சில பிரதிகளில் 'பிடிவலஞ்சி' என்பது பாடம்" என்பது பழைய குறிப்பு.