சொல்லதிகாரம்130முத்துவீரியம்

உயர்திணை ஆண்பாற் பெயர்கள்

477. னகார விறுதி குடிநிலங் குழூஉவினை
     திணைநிலை சினைநிலை பண்புகொள் பெயரே
     யெண்ணுப் பெயரொடு சுட்டுவினாப் பெயர்
     உயர்திணை யாண்பாற் படர்க்கைப் பெயரே.

(இ-ள்.) னகரமெய்யீறாகிய குடிப்பெயரும் நிலப்பெயரும் குழுவின் பெயரும்
வினைப்பெயரும் திணைநிலைப்பெயரும் சினைநிலைப்பெயரும் குணப்பெயரும் எண்ணுப்
பெயரும் சுட்டுப்பெயரும் வினாப்பெயரும் உயர்திணை யாண்பாற் படர்க்கைப் பெயராம்.

(வ-று.) மலயமான், சேரமான், குடி; அருவாளன், சோழியன் நிலம்; அவையத்தான்,
அத்திகோசத்தான் குழு; வருவான், போவான், வினை; வெற்பன், சேர்ப்பன், திணை;
பெருங்காலன், திணிதோளன், சினை, கரியன், செய்யன், பண்பு; ஒருவன், எண்; அவன்,
இவன், உவன், சுட்டு; எவன்? யாவன்? வினா. (20)

இதுவுமது

478. கோவேள் விடலை குருசி றோன்றல்
     ஆடூஉ நம்பியு மதன்பால வென்மனார்.

(இ-ள்.) கோ, வேள், விடலை, குருசில், தோன்றல், ஆடூஉ, நம்பி
உயர்திணையாண்பாற் படர்க்கையாம்.

(வி-ரை.)

‘அவற்றுள்,
கிளையெண் குழூஉமுதற் பல்பொரு டிணைதேம்
ஊர்வா னகம்புற முதல நிலன்யாண்
டிருது மதிநா ளாதிக் காலம்
தோள்குழன் மார்புகண் காது முதலுறுப்
பளவறி வொப்பு வடிவு நிறங்கதி
சாதி குடிசிறப் பாதிப் பல்குணம்
ஓத லீத லாதிப் பல்வினை
இவையடை சுட்டு வினாப்பிற மற்றோ
டுற்றனவ் வீறு நம்பி யாடூஉ
விடலை கோவேள் குரிசி றோன்றல்
இன்னன வாண்பெய ராகு மென்ப’ (நன் - பெயரியல் - 19)

என்று நன்னூற் கருத்துக்கள் மேலைய நூற்பாவிலும் இந்நூற்பாவிலும் இடம் பெற்றுள்ளன.
(21)