சொல்லதிகாரம்166முத்துவீரியம்

(இ-ள்.) அன், ஆன், அள், ஆள் என்னும் ஈற்றவாகிய நான்கு சொல்லும் உயர்திணை
ஒருமையுணர்த்தும் படர்க்கைச் சொல்லாம்.

(வ-று.) உண்டனன், உண்டான், உண்டனள், உண்டாள் எனவரும். (11)

உயர்திணைப் படர்க்கைப் பன்மை வினைமுற்று

605. அர்ஆர் பகர விறுதிக் கிளவி
     அத்திணை மருங்கிற் பல்லோர் படர்க்கை.

(இ-ள்.) அர், ஆர், ப என்னும் ஈற்றையுடையவாய் வரும் மூன்று சொல்லும்
உயர்திணைக்கட் பல்லோரை யுணர்த்தும் படர்க்கைச் சொல்லாம்.

(வ-று.) உண்டனர், உண்பார், உண்ப. (12)

இதுவுமது

606. மாரைக் கிளவியு மவற்றோ ரற்றே.

(இ-ள்.) முன்னையனவேயன்றி மாரீற்றுமொழியும் பல்லோர் படர்க்கையை யுணர்த்தும்.

(வ-று.) கொண்மார் வந்தார். (13)

யார்

607. ஆண்பெண் பலரொடும் யாரெனு மொழிவரும்.

(இ-ள்.) யாரென்னும் வினாப்பொருளை யுணர்த்துஞ் சொல் உயர்திணைக்கண்
ஆண்பெண் பலரொடும் வரும்.

(வ-று.) அவன்யார், அவள்யார், அவர்யார் எனவரும். (14)

ன, ள, ர ஈற்றயல் ஆ, ஓ ஆதல்

608. ஆன்ஆள் ஆர்முத லாவோ வாகும்.

(இ-ள்.) பால்விளக்க வரும் இயல்பையுடைய ஆன், ஆள், ஆர் முதலாகாரம்
ஓகாரமாமென்க.

(வ-று.) ‘வினவி நிற்றந்தோனே’ (அகம்-48), ‘நல்லைமன்னென நகூப்பெயர்ந்
தோளே’ (அகம் - 248) ‘‘பாசிலை வாடாவள்ளியங் காடிறந் தோரே’’ (குறுந் - 214). (15)