சொல்லதிகாரம்196முத்துவீரியம்

(இ-ள்.) இல்லாப்பொருட்கும் இடமுங் காலமும் பொருளு முதலாயினவற்றோடு படுத்து
இன்மை கூறுதற்கண் உம்மைகொடுத்துக் கூறுக.

(வ-று.) பவளக்கோட்டு நீலயானை சாதவாகனன் கோயிலுள்ளு மில்லை; குருடு
காண்டல் பகலு மில்லை.

(வி-ரை.) ‘மன்னாப் பொருளும் அன்ன வியற்றே’ (கிளவி - 34) என்னும்
தொல்காப்பியத்தைத் தழுவியது இந்நூற்பா ஆகும். அதற்கு இல்லாத பொருள் என
இளம்பூரணர், கல்லாடர், சேனாவரையர், பழைய வுரையாசிரியர் ஆகிய அனைவரும்
பொருள் உரைத்தனர். நச்சினார்க்கினியர் நிலையாத பொருள் என உரை கண்டனர்.
இவ்வாசிரியர் இளம்பூரணர் முதலாயினோரின் உரையைத் தழுவி யுரைத்துள்ளார்.
நன்னூலார், இவ்விரு பொருளும் அமைய ‘உலகினிலாப் பொருள்’ என்றுரைத்தனர். (69)

வழக்கில் வரும் மரபு

712. யாதெனு மொருபொரு ளல்லதில் லென்பான்
     அஃதல பிறபொரு ளறைவது வழக்கே.

(இ-ள்.) யாதானும் ஒருபொருள் தம்பாலில்லாத பொருளை இல்லையென்பவன்
அஃதல்லாத பிறபொருளைக் கூறுவது வழக்காம்.

(வ-று.) பயறுளவோ வணிகீரென்று வினாயவழி அஃதில்லை யென்பான்
உழுந்துண்டெனக் கூறல்.

(வி-ரை.) பிறபொருள் என்றாரேனும் அதற்கு இனப்பொருள் என்றே பொருள் காண
வேண்டும். தம்பால் ஒருபொருள் இல்லையாயின், அதற்கு இனப்பொருள் கூறி இதுவல்லது
இல்லை என்று கூறலே வழக்கு. நன்னூலாரும் ‘தம்பாலில்லது இல்லெனின் இனனாய்
உள்ளது கூறியும்’ (நன் - பொது - 55) என்றுரைப்பர். (70)

இயற்பெயரும் சுட்டுப்பெயரும்

713. இயற்பெயர்ச் சுட்டுப் பெயரு மிரண்டும்
     வினைகொளற் கொருங்கியல் காலத் தானே
     சுட்டுப் பெயரை முற்படக் கிளவார்.

(இ-ள்.) இயற்பெயரும், சுட்டுப் பெயருமாகிய இரண்டு பெயரும் வினைகோடற்கு
ஒருங்கு நிகழுங்காலம், சுட்டுப்பெயரை முற்கூறார்.

(வ-று.) சாத்தனவன் வந்தான், சாத்தன் வந்தானவன் போயினான். (71)