சொல்லதிகாரம்197முத்துவீரியம்

அவை செய்யுட்கண் வரும் மரபு

714. முற்படக் கூறல் யாப்பினு ளுரித்தே.

(இ-ள்.) இயற்பெயரும், சுட்டுப்பெயரும், வினைகோடற் கொருங்கு நிகழுங்காலம்,
சுட்டுப்பெயரை முற்படக் கூறல் செய்யுட்கணுரித்தாம்.

(வ-று.)

‘‘அவனணங்கு நோய்செய்தான் ஆயிழாய் வேலன்
விறன்மிகுதார்ச் சேந்தன்பேர் வாழ்த்தி-முகனமர்ந்து
அன்னை அலர்கடப்பந் தாரணியில் என்னைகொல்
பின்னை அதன்கண் விளைவு’’

(வி-ரை.) இதன்கண் சேந்தன் என்ற இயற்பெயர் பின்னரும், அவன் என்னும்
சுட்டுப்பெயர் முன்னரும் வந்தமை காண்க. (72)

சுட்டுமுதலாகிய காரணப் பெயர்

715. சுட்டுமுத லாகிய காரணப் பெயரும்
     முற்படக் கிளத்தன் முறையன் றாகும்.

(இ-ள்.) சுட்டுமுதலாகிய காரணப்பெயரும், சுட்டுப் பெயரைப் போலப்
பின்னுரைக்கப்படும்.

(வ-று.) சாத்தன் கையெழுதுமாறு வல்லன் அதனால் தந்தை யுவக்கும்; சாத்தி
சாந்தரைக்குமாறு வல்லள் அதனாற் கொண்டானுவக்கும். (73)

இயற்பெயரும் சிறப்புப்பெயரும்

716. வினைக்கொருங் கியலும் விழுமிய பொருட்கும்
     இயற்பெயர் முற்பட வியம்பினாம் வழுவே.

(இ-ள்.) வினைகோடற்கு ஒருங்கியலும்வழி சிறப்பானாகிய பெயர்க்கும் இயற்பெயரை
முற்படக்கூறல் வழுவாம்.

(வ-று.) ஏனாதி நல்லுதடன்; காவிதி கண்ணந்தை; முனிவன் அகத்தியன்;
தெய்வப்புலவன் திருவள்ளுவன் எனவரும். (74)

ஒரு பொருள் குறித்த பல பெயர்

717. ஒருபொருள் குறித்த பலபெயர்க் கிளவி
     ஒருவினை முடிபறை யாதப் பெயர்தொறும்
     வேறொரு வினைதந் துரைப்பது விதியே.