யாப்பதிகாரம்464முத்துவீரியம்

நாற்கவிகள்

1016. ஆசு மதுரஞ் சித்திரம் வித்தாரம்
     ஆகு நாற்கவி யறையுங் காலே.

என்பது, ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி எனக் கவி நான்கு
வகைப்படும். (55)

ஆசுகவி

1017. அவற்றுள்
     பொருளடி பாவணி முதலிய கொடுத்துப்
     பாடெனப் பாடுவோ னேயாசு கவியே.

என்பது, முற்கூறியவற்றுள், பொருளும், அடியும், பாவும், அணியும், முதலியவை
கொடுத்துப் பாடுகவெனப் பாடுவோன் ஆசுகவி. (56)

மதுரகவி

1018. தொடையுந் தொடையின் விகற்பமுஞ் செறியச்
     சொற்சுவை பொருட்சுவை தோன்ற வுருவகம்
     ஆதிய வணிகளோ டணிபெறப் பாடுவோன்
     மதுர கவியென வழுத்தப் படுமே.

என்பது, தொடையும் தொடைவிகற்பமும் செறியச், சொற் சுவையும்
பொருட்சுவையும் விளங்க, உருவகஅணி முதலிய முப்பத்தைந்தணிகளோடு, அலங்காரம்
பெறப் பாடுவோன் மதுரகவி. (57)

சித்திரக்கவி

1019. ஏக பாத மெழுகூற் றிருக்கை
     காதை கரப்புக் கரந்துறைச் செய்யுள்
     கூட சதுக்கங் கோமூத் திரிமுதல்
     தெரிந்து பாடுவோன் சித்திரக் கவியே.

என்பது, ஏகபாதமும், எழுகூற்றிருக்கையும், காதை கரப்பும், கரந்துறைச் செய்யுளும்,
கூடசதுக்கமும், கோமூத்திரியும் இவை முதலிய வறிந்து பாடுவோன் சித்திரக்கவி. (58)