யாப்பதிகாரம்475முத்துவீரியம்

அனுராகமாலை

1048. கனவி லொருத்தியைக் கண்டுகேட் டுண்டுயிர்த்
      தினிமை யுறப்புணர்ந் ததைத்தன் னின்னுயிர்ப்
      பாங்கற்குத் தலைமகன் பகர்ந்த தாக
      நேரிசைக் கலிவெண் பாவா னிகழ்த்துவ
      தனுராக மாலையா மாயுங் காலே.

என்பது, தலைவன், கனவின்க ணொருத்தியைக்கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து,
இனிமையுறப் புணர்ந்ததைத் தன்னுயிர்ப் பாங்கற் குரைத்ததாக நேரிசைக் கலிவெண்பாவாற்
கூறுவது அனுராகமாலையாகும். (87)

இரட்டை மணிமாலை

1049. இருபஃ தந்தா தித்துவெண் பாவும்
      கட்டளைக் கலித்துறை யுங்கலந் துரைத்தல்
      இரட்டை மணிமாலை யென்மனார் புலவர்.

என்பது, முறையானே வெண்பாவும், கட்டளைக்கலித்துறையும் இருபது அந்தாதித்
தொடையான் வருவது இரட்டை மணிமாலையாகும். (88)

இணைமணிமாலை

1050. வெண்பா வகவல் வெண்பாக் கலித்துறை
      இரண்டிரண் டாக விணைத்து வெண்பா
      அகவ லிணைமணி மாலை வெண்பாக்
      கலித்துறை யிணைமணி மாலை யாகும்.

என்பது, வெண்பாவும், அகவலும், வெண்பாவும், கலித்துறையும், இரண்டிரண்டாக
விணைத்துப் பாடுவது வெண்பாவகவ லிணைமணிமாலை யெனவும், வெண்பாக்கலித்துறை
யிணைமணி மாலை யெனவும் பெயர் பெறும். (89)

நவமணிமாலை

1051. அந்தா தித்து வெண்பா வாதிய
      பாவும் பாலினமு மாக வொன்பது
      செய்யு ளணிபெறச் செப்புவ ததுதான்
      நவமணி மாலையா நாடுங் காலே.