யாப்பதிகாரம்482முத்துவீரியம்

வாகைமாலை

1078. மாற்றாரை வென்று வாகை சூடுவதை
      அகவலி னாலறை வதுவாகை மாலை.

என்பது, பகைவரை வென்று புகழ்படைத்து வாகைப் பூமாலை சூடுவதை
ஆசிரியப்பாவாற் கூறுவது வாகை மாலை யாகும். (117)

வாதோரண மஞ்சரி

1079. யானைவயப் படுத்தி யடக்கின வருக்கும்
      எதிர்பொரு மியானையை யீர வெட்டி
      அடக்கின வருக்கு மதட்டிப் பிடித்துச்
      சேர்த்த வர்க்கும் வீரச் சிறப்பை
      வஞ்சியாற் பாடுவ ததுவா தோரண
      மஞ்சரி யெனப்பெயர் வைக்கப் படுமே.

என்பது, யானையை வயப்படுத்தி அடக்கினவருக்கும், எதிர்த்த யானையை
வெட்டி அடக்கினவருக்கும், பற்றிப் பிடித்துச் சேர்த்தவருக்கும் வீரப்பாட்டின் சிறப்பை
வஞ்சிப்பாவால் தொகுத்துப் பாடுவது வாதோரண மஞ்சரியாகும். (118)

எண் செய்யுள்

1080. பாட்டுடைத் தலைவ னூரும் பெயரும்
      பத்துமுத லாயிர மளவும் பாடி
      எண்ணாற் பெயர்பெற லெண்செய்யு ளாகும்.

என்பது, பாட்டுடைத் தலைவன் ஊரையும் பெயரையும் பத்து முதல் ஆயிரமளவும்
பாடி எண்ணாற்பெறுவது எண்செய்யுளாகும். (119)

தொகைநிலைச் செய்யுள்

1081. நெடிலடிப் பாவாற் றொகுத்தது நெடுந்தொகை
     குறளடிப் பாவாற் றொகுத்தது குறுந்தொகை
     கலியிற் றொகுத்தது கலித்தொகை போல்வன
     தொகைநிலைச் செய்யு ளெனச்சொலப் படுமே.