எழுத்ததிகாரம்78முத்துவீரியம்

(இ-ள்.) மீயென்னு மேலிடப்பெய ரியல்பாதலு மொருகால் மெல்லெழுத்து மிகுதலும்
ஒருகால் வல்லெழுத்து மிகுதலுமாம் என்று சொல்லுவ ரறிவுடையோர்.

(வ-று.) மீகண், மீந்தோல், மீத்தோல் எனவரும். (112)

5. உகர ஈறு

அதுமுன் அன்று வருதல்

272. அன்றது முன்வரி னாவா கலும்ஐ
     வரினுக ரங்கெடு தலுமாந் தூக்கின்.

(இ-ள்.) செய்யுளில் அதுவென்னுஞ் சுட்டுப்பெயருக்கு முன் அன்றென்னும்
குறிப்பெச்சவினைவரின் ஆவாதலும், ஐ வரின் உகரங் கெடுதலுமாம்.

(வ-று.) அது + அன்று = அதான்று; அது + ஐ =அதை எனவரும்.

(வி-ரை.)

‘‘அன்றுவரு காலை ஆவா குதலும்
ஐவரு காலை மெய்வரைந்து கெடுதலும்
செய்யுள் மருங்கின் உரித்தென மொழிப’’ (உயிர்ம-56)

என்பது தொல்காப்பியம். (113)

செரு, எரு என்னும் பெயர்கள்

273. செருவு மெருவு மம்மொடு சிவணும்.

(இ-ள்.) செருவென்னும் பெயரும், எருவென்னும் பெயரும், அம்முச்சாரியை பெறும்.

(வ-று.) செருவங்களம், எருவங்குழி. (114)

செரு என்பதற்குச் சிறப்பு விதி

274. அம்மிறு மகரஞ் செருவயி னழியும்.

(இ-ள்.) முற்கூறியவற்றுள் அம்முச்சாரியை இறுதி மகரமெய் செருவிற் கெடும்.

(வ-று.) செருவக்களம். (115)