எழுத்திலக்கணம்028
16.ஒற்றிற்கு ஒருசுழி உயரக் காட்டியும்
 பிறர்செவி யறியப் பேச ஒண்ணா
 இயல்பினது ஆகி இதயத்து அவிர்ந்து
 பொறியினம் விளையும் பூமி ஆகி
 உயிரொலி பிறழ்தற்கு ஆதரம் ஆகி
 அதனொடு கூடின் தொனிப்பது ஆகி
 ஆய்தம் என்கைக்கு அண்ணிது ஆகிக்
 கிடக்கும் என்றே கிளத்தினர் புலவோர்.
வரிவடிவில் மேற்புள்ளியிட்டுத் தனியாகக் காட்டப்பெறினும் (உயிரின் துணை இன்றிப்) பிறர் கேட்குமாறு உச்சரிக்க முடியாதனவாகவும், ஆனால் உள்ளத்தே உணரப்படுவனவாகவும், உயிர்மெய் எழுத்துகள் தோன்றும் நிலமாகவும், உயிர் ஒலிகள் தம்மேல் ஏறி ஒலிக்க இடந்தரும் அடிப்படையாகவும், உயிரோடு சேர்ந்தால் மட்டுமே ஒலிக்கப் படுவனவாகவும், ஆய்தத்தின் சில தன்மைகளைப் பெற்றிருப்பதால் அதனோடு ஒருபுடையொப்புமை உடையனவாகவும் மெய்யெழுத்துகள் இருக்கும் என்பர் அறிஞர் என்றவாறு.
தனி வரிவடிவம் இருப்பினும் ஒலித்தல் இயலாது என வற்புறுத்த இந்நூற்பாவுள் மேற்சுழி அநுவதிக்கப்பட்டது. மெய்யெழுத்துகள் என்பதனை அதிகாரத்தாற் பெற்றாம். ஆய்தம், மெய் ஒற்றுமைகள் முன் 14ஆம் நூற்பாவில் உரைக்கப்பட்டன. மேலும் 92ஆம் நூற்பாவிலும் உரைக்கப்படும். மெய்யெழுத்திற்கு இயக்கம் இன்மையின் கிடக்கும் என்றார்.
(16)
17.ஆய்தமும் ஒற்றும் அறிந்தவாறு உரைத்தனம்;
 தனித்தனி ஒவ்வோர் ஒற்றும் உயிர்களில்
 நிரைபெறப் புணர்ந்தமை நிகழ்த்தி அதன்அதன்
 தொனிவரும் உழையும் சொல்லுதும் துணிந்தே.
ஆய்தம், மெய்யெழுத்துகள் பற்றித் தெரிந்தவாறு கூறினோம். இனித் தனித்தனியாக ஒவ்வொரு ஒற்றும் உயிரோடு கூடிப்பெறும் வரிவடிவங்களையும், அவை பிறக்குமிடங்களையும் உறுதியாகச் சொல்வோம் என்றவாறு.