அறுவகையிலக்கணம்029
“உயிர்களில் புணர்ந்தமை நிரைபெற நிகழ்த்தி” எனக் கூட்டுக. இந்நூற்பாவுள் உரைத்தாம் என்றல், நுதலிப்புகுதல் ஆகிய இரு உத்திகளும் கையாளப்பட்டன, ஆய்தமும் ஒற்றும் ஒருபுடையொப்புமை உடையன எனும் தன் கருத்தை வலியுறுத்தவே ஆய்தத்திற்குப் பின் தனியே உரைத்தாம் எனக் கூறாது ஈண்டு இரண்டிற்கும் பொதுவாக்கி உரைத்தார். எம் உள்ளத்தே சற்றும் ஐயம் இன்மையின் மயக்கமின்றித் தெளிவாகக் கூறுவோம் என்பார் துணிந்தே என்றார்.
(17)
4. உயிர்மெய் எழுத்து
ககர வருக்கம்
18.இருசுழி எழுதா ஈகாரத்து ஈறு
 பற்றி, இடவரை அடிசுழி யாதுஅதன்
 இடம்சிறிது இடம்பட மேல்நோக்கி வலமா
 நடுவளைத்து, அவ்விரு வரைக்குறுக் கேற்றி
 மேல்வரை யளவிற் கொணர்ந்து, கீழ்ஒரு
 தோட்டியில் வளைக்கில் ககரம்; அதன்வலம்
 முற்பகர் குறிஉறில் காஆம்; முடியில்
 பிறைகவிழ்த் தாலென எழுதில் கிகரம்ஆம்;
 அப்பிறை வலம்நுனி சுழிக்கில் கீஆம்;
 ஈற்றுச் சிறுவளை வதனைப் பெருக்கி
 இடமாத் தலைவரை கொணரிற் குகரம்ஆம்;
 அவ்வளை வதனைக் கீழுற நிமிர்ந்து, அது
 தொட்டுமேற் கொண்டு வலத்துஒரு சிறுவளைவு
 இட்டுஅவண் நீட்டில் கூஆம்; ஒகரம்
 போலக் கொணர்ந்துஉட் புகுதாது கீழ்இழுத்து
 இட்டகொம்பு ஒன்றுமுன் இசையிற் கெகரம்ஆம்;
 அக்கொம்பு ஈற்றின்மேற் சுழிக்கிற் கேஆம்;
 இணைக்கொம்பு ஒன்றோடொன்று இசைவுற எழுதிய
 பின்னுறிற் கைஆம்; கெக்கே இரண்டினும்
 காஎனும் எழுத்தின் பிற்குறி அணையின்
 கொக்கோ ஆகும்; கெகரத்து ஈற்றில்
 ஒளகா ரத்துஇரண் டாம்எழுத்து அணையில்
 கௌஎனத் திகழும்; சுழறிவை முற்றும்
 அடிநாக் கொடுமிடறு அடைத்துஒலிப் பனவே.