எழுத்திலக்கணம்034
பிறைகள் சற்று அதிகமாக வளைந்து இவ்வெழுத்தின் (ஞ) டுவிலுள்ள குத்துக்கோட்டின் மேல் பொருந்தினால் ஞி, ஞீ தோன்றும். இதன் (ஞ) கடைசிப் பகுதியை மேல் பக்கமாகக் கொண்டுவராமல் அகரம் போல் வரைந்து கீழ்ப்புறம் இழுக்காமல் நிறுத்தின் அது ஞுகரம் ஆம். அவ்வடிவின் (ஞு) வலத்தே இழுத்து அக்கோட்டின் நடுவே கம்பத்தைப் போன்ற ஒரு நேர்கோடு (கீழாக) வரைந்தால் ஞூ ஆகும். ஞா, ஞெ, ஞே முதலியன ஙா, ஙெ, ஙே முதலிய எழுத்துகளின் குறிகளையே பெற்றுக் கிடக்கும். நீண்ட நாவின் முற்பகுதியும் மேல் அண்ணமும் பொருந்துவதால் இதன் ஒலி பிறக்கும் என்றவாறு.
இந்நூற்பாவுள் ஆதிய என்றது ஞை, ஞொ, ஞோ, ஞௌ ஆகிய நான்கு உயிர் மெய்களையாம்.
ஞி, ஞீ என்ற இகர ஈகாரக் குறிகள் எழுத்திற்குள் அடங்கியதாக இருத்தல் வேண்டுமென்பது இவர் கொள்கை. நல்வரை என்றது சாய்வற்ற நேர்கோட்டை. கீழ் என்பது வருவித்துரைக்கப்பட்டது.
“அ, ஆ எ ஒவ்வொடு ஆகும் ஞம்முதல்”1 எனினும் மிகச் சிறுபான்மை ஞிமிறு என இகரம் பெற்றுவரினும் ஞகர வருக்க உயிர்மெய் அதிகமாக ஆளப்படாமையின் நிலைபெறீஇக் கிடப்பன என்றார்.
பிறப்புணர்த்துங்காலைத் தொல்காப்பியர் முழு நாவையுங் கருத்தில் கொண்டு, “சகர ஞகாரம் இடைநா அண்ணம்”2 என்றார். இவர் வாய்க்கு வெளியே நீளும் நாவைக் கருத்திற் கொண்டு அதன் முற்பகுதி என்றார். இதற்காகவே நாவிற்கு நீள் என்னும் அடை புணர்த்து வினைத்தொகையாக்கினார். இந்நூற்பாவுள் கூறப்பட்ட அண்ணத்தைச் சகரத்திற்கும் கொள்க.
(21)