அறுவகையிலக்கணம்039
“அண்ணம் நண்ணிய பல்முதன் மருங்கின் நாநுனி பரந்து மெய்யுற ஒற்றத் தாம்இனிது பிறக்கும் தகார நகாரம்”1 என்ற நூற்பாவிற்குப் “பல்லின் அடியில் தகாரமும் அதன் மருங்கில் நகாரமும் பிறக்கும் என நிரல் நிறைவகையாற் பொருள் கொள்ளினும் பொருந்தும்2 எனப் பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் கருதுகிறார். இவ்வாசிரியர் அவ்வாறே தகரம் தோன்றும் இடத்தைவிடச் சற்று உள்ளேதள்ளி நகரம் தோன்றும் என்கிறார். அழுத்தமாக நுனிநா ஒன்றினால் தகாரமும் மெதுவாகப் பொருந்தினால் நகாரமும் தோன்றும் என்னும் வேறுபாடும் இதில் கூறப்பட்டது.
(25)
பகர வருக்கம்
26.டகரத்து ஈற்று வரையினைக் குறைத்து
 வலத்தும் ஓர்நிலை வரைஇடில் பகரம்;
 மூன்றுதொட்டு ஆறு வரையினும் ஙகர
 வருக்கத்து அவ்வத் தொகைஎழுத்து உறுகுறி
 பொருந்தும்; பாவொடு பெகரம் ஆதிய
 தகர வருக்கத் தன்மையிற் பிறங்கும்;
 மொழிதரு தொனிஇதழ் மூடித் திறக்குமே.
ட என்ற எழுத்தின் இரண்டாவதான படுக்கைக் கோட்டின் நீளத்தைக் குறைத்து அதன் வலப்பாகத்தே ஒரு குத்துக்கோடு வரைந்தால் பகரம் ஆகும். பி என்னும் மூன்றாவது முதல் பூ என்னும் ஆறாவது உயிர்மெய் வரை உள்ளவை ஙி முதல் ஙூ வரை எழுதப்படுவது போலவே எழுதப்படும். பா, பெ முதலிய மற்ற பகர வருக்க உயிர்மெய்கள் (தா, தெ முதலிய) தகரவருக்க எழுத்துகளின் துணைக்குறிகளையே பெற்று விளங்கும். உதடுகள் (ஒருமுறை) மூடித்திறந்தால் இதன் ஒலி பிறக்கும் என்றவாறு.