அறுவகையிலக்கணம்041
பத்தியாகப் பகரம் வல்லெனப் பிறக்கும் என்பது பெறப்பட்டது. மெகரம் ஆதி என்றது மே, மை, மொ, மோ, மௌ ஆகிய உயிர்மெய்களையாம்.
(27)
யகர வருக்கம்
28.பகர எழுத்தின் முதல்நிலை வரைவலத்து
 இடம்சிறிது ஒடுங்க நடுஒரு நிலைவரை
 அவ்விரு வரைகளின் அளவில் காட்ட
 யகரம் தோன்றும்; யாமுதல் யௌவரை
 பாமுதல் பௌவரை நிகழ்வதின் நிற்பன.
 நுனிநா மேற்புறம் அடிப்பல் உட்புறத்து
 ஒன்றக் களம்தரு கால்துணை பற்றி
 இகரஞ் சார்ந்துஒலி தரும்எனல் இயல்பே.
பகரத்தின் முதல் செங்குத்துக் கோட்டிற்கு வலப்பக்கமாகவும், இடதுபுறப்பகுதி வலப்பகுதியைவிடச் சற்றுக் குறுகியதாக இருக்கும் படியும், (ப வடிவில் உள்ளனவாகிய) இரு கோடுகளின் உயரத்திற்குச் சமமாகவும் அவற்றின் நடுவே ஒரு கோடு வரையப்படின் அது யகர வரிவடிவம் ஆகும். யா முதல் யௌ வரையான உயிர்மெய்கள் அனைத்தும் பா முதல் பௌ வரை போன்றே விளங்கும். நுனிநாவின் மேற்பகுதி அடிப்பற்களின் உட்புறம் பொருந்த, மிடற்றுவளியின் துணை கொண்டு இகரத்தோடு சார்புற்று யகரம் பிறக்கும் என்றவாறு.
“அண்ணஞ் சேர்ந்த மிடற்றெழு வளியிசை கண்ணுற்றடைய யகாரம் பிறக்கும்”1 என்ற தொல்காப்பியத்தின் இளம்பூரணர் உரையைத் தழுவிப் பவணந்தியார், “அடிநாவடியண முறயத் தோன்றும்”2 என்கிறார். ஆனால் இலக்கண விளக்கமுடையார் முற்குறித்த தொல்காப்பிய நூற்பாவின் நச்சினார்க்கினியர் உரையை அடியொற்றி, “அண்ணஞ் சேர்ந்த மிடற்றெழு வளியிசை கண்ணுற்றடைய யகாரமும்” என்றே சூத்திரஞ் செய்து அதன் உரையையும் நச்சரைப்