அறுவகையிலக்கணம்043
முறையே ரிகரமும் ரீகாரமும் ஆகும். ரகரத்தின் கடைசிக் குத்துக்கோட்டின் நடுவில் வலப்புறத்தில் இருந்து ஞ என்ற எழுத்தின் இறுதி வளைகோடு பொருந்தினாலும், அவ்வளைகோட்டின் நுனியில் சுழித்தாலும் முறையே ரு, ரூ தோன்றும். ரா, ரெ முதலியன யாவும் முன் நூற்பாவில் (யகர வருக்கம். கூறப்பட்டபடியே சற்றும் மாற்றமின்றி இருக்கும். நாநுனி அண்ணத்தை மெதுவாகத் தொட்டு அண்ணம் பின்னேபோகும் படி (நாவை முன்பக்கமாகத்) தடவுவதால் ரகரம் பிறக்கிறது என்றவாறு.
ஓலைச்சுவடி, செப்பேடு, கல்வெட்டு ஆகியவற்றுள் ரகரமும் உயிர்மெய் நெடிலைக் காட்டும் காலும்(£) ஒரே மாதிரி எழுதப்பெறும். நாம் இப்போது பயன்படுத்தும் ரகர வரிவடிவம் கிரந்த எழுத்தின் திரிபு ஆகும். இதுபற்றியே இந்நூற்பாவுள் கால் ரகரமாகக் கூறப்பட்டது. இதில் ரெகரம் ஆதிய என்றது ரே, ரை, ரொ, ரோ, ரௌ என்பனவற்றை.
(29)
லகர வருக்கம்
30.ரௌஎனும் பொறியின் கடைக்குறி யதன்முற்
 பகுதி காட்டி அதன்ஈறு பற்றி
 வலமா மேலுற வனளத்திடல் லகரம்;
 அவ்வளை வதன்வலத்து அடிதொட்டுக் கீழ்க் கொணர்ந்து
 அதன்வலந் தொட்டு நுந்நூப் பிற்குறி
 பொருத்த லுகர லூகாரம் பொலிதரும்;
 ணையெழுத்து இயல்பே லைகாரம் மன்னும்;
 லாகாரம் லிகர லீகாரம் லெகர
 லேகாரம் லொகர லோகாரம் லௌஎனும்
 எட்டும் யகரத்து இனம்என இசைவுறும்.
 நாநுனி அண்ணா முன்னோக்கித் தடவும்
 ஒலியின வாகும்என்று உரைத்திடல் முறையே.
ரௌ என்ற எழுத்தின் ஈற்று அடையாளத்தின் (ள) முற்பாதியை வரைந்துகொண்டு அதன் கடைசியிலிருந்து வலமாக மேல்நோக்கி வளைத்தால் அது லகரத்தின் வரிவடிவம் ஆகும்.