அறுவகையிலக்கணம்045
ழகர வருக்கம்
32.மகரத்து ஈற்றைத் தொட்டுச் சிறிது
 கீழ்இழுத்து அதன்வலம் தோட்டி இசைக்க
 ழகரம் தோன்றும்; ழாமுதற் பிறஎலாம்
 மாமுதற் பிறவே போல் மன்னும்
 நாவளைந்து உள்வாங்கு ஒலியின வாமே.
ம என்ற வரிவடிவின் கடைசி வளைவைச் சற்றுக் கீழே நீட்டி அதன் வலப்புறம் ஒரு அங்குச வடிவத்தைப் பொருத்தினால் ழகர வரிவடிவம் ஆகும். ழா முதலிய பிற உயிர்மெய்கள் அனைத்தும் மா போன்றனவற்றைப் போன்றே விளங்கும். நா மேற்புறமாக நன்றாக உள்வாங்கி வளைந்து அண்ணத்தைத். தடவுவதால் ழகர ஒலி பிறக்கும் என்றவாறு.
ரகர ழகரங்கள் இரண்டும் நுனிநா அண்ணத்தைப் பொருந்தப் பிறக்கின்றன. ஆனால் ரகரத்திற்கு வளைவதை விட அதிகமாக நா உட்புறம் வளைந்து ழகரத்தைத் தோற்றுவிக்கிறது மேலும் ரகரத்திற்கு மென்மையாகவும் ழகரத்திற்குச் சற்று அழுத்தமாகவும் அது அண்ணத்தோடு பொருந்துகிறது. இந்நுட்பமான வேறுபாடுகளைக் காட்டவே ரகரப்பிறப்பில் “மெல்லெனத் தொட்டு” எனவும் இங்கு “உள்வாங்கு” எனவும் உரைத்தார். இந்நூற்பாவை 29 ஆம் சூத்திரத்தோடு மாட்டேற்றிக் கொள்க. அருத்தாபத்தியால் ரகரத்திற்கு நா வளைவு சற்று வெளிப்புறமானது என்பதுவும், ளகரம் அழுந்தி ஒன்றப் பிறக்கும் என்பதுவும் பெறப்பட்டன. இந்நூற்பாவில் இடம் பெறாத அண்ணமும் வருடலும் அந்நூற்பாவிலிருந்து பெறப்பட்டன.
(32)
ளகர வருக்கம்
33.ஒளஎனும் எழுத்துஎம் மெய்யொடு புணரினும்
 தொடரும்ஈற்று எழுத்தே ளகரம் ஆகும்;
 லைக்குறி பொருந்தி ளையெனல் விளங்கும்;
 மற்றைய எழுத்தோர் பத்தும் ரகர
 வருக்கம் போன்றே மன்னுறீஇக் கிடக்கும்;