அறுவகையிலக்கணம்047
றௌவும் தகர வருக்கம் போன்றே
 அமைவுறும் குறியின; அண்ணா வதனை
 நுனிநாப் பின்னர் நோக்கித் தடவ
 உருமி போலும் ஒலிதரும் அன்றே.
ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருக்கும்படி கீழ் நோக்கிய இரண்டு வளைவுகளையிட்டு வலப்புறம் உள்ள கோட்டைக் கீழே இழுத்தால் றகர வடிவம் ஆம். (வலப்புறத்தில் உள்ள) அக்கோட்டில் தொடங்கிக் குகரம் போல் முடித்தால் றா தோன்றும். றொகரம், றொகாரம் ஆகிய இரண்டினும் இந்நெடிற்குறியே இடம் பெற்று இரண்டு குறிகளை உடைய வரிவடிவமாகும். (ஒகர ஓகாரம் ஏறிய கொ, ளோ, போன்ற பிற உயிர்மெய்களைப் போல் மூன்று குறிகளைப் பெறா). றிகரம் முதல் றைகாரம் வரையான ஏழும், றௌவும் தகர உயிர்மெய்களைப் போன்றே எழுதப்படும் குறிகளை உடையன. நா நுனி அண்ணத்தைப் பின்னோக்கித் தடவுவதால் உருமிமேளத்தைப் போன்ற ஓசையோடு றகரம் பிறக்கும் என்றவாறு.
உருமியை ஒருமுறை தடவினால் முதல் ஒலி எழுவதுடன் நின்றுவிடாமல் தோல் அதிர்வு தொடர்ந்து சற்றுநேரம் ஒலித்துக் கொண்டே இருக்கும். றகர ஓசையும் இப்பெற்றியதாதலைக் காற்று, குற்றம் போன்றவைகளை உச்சரித்து அறிந்து கொள்ளலாம். இடையின ரகரத்திற்கும், ஈற்று னகரத்திற்கும் இதற்கும் உள்ள தலையாய வேறுபாடு இத்தொடரொலியே.
(34)
னகர வருக்கம்
35.குறுகிய ஒற்றைக் கொம்புடன் எகரம்
 பொருந்த னகரம் பொலிதரும். மற்றைப்
 பதினோ ரெழுத்தும் ணகர வருக்கத்து
 இயல்பே விளங்கும்; இவற்றின் தொனியால்
 முன்நா அண்ணா முட்டும் அன்றே.